‘ஜனநாயகன்’ படம் தாமதமானாலும், அது சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புகிறேன் – நடிகர் கார்த்தி!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. நாளை ஜனவரி 15 வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், பல தடங்கல்களுக்கு பிறகே ‘வா வாத்தியார்’ படம் வெளியாகிறது. என் முதல் படமான ‘பருத்திவீரன்’ கூட பல தடங்கல்களை கடந்து தான் வெளியானது. அதேபோல் என் இரண்டாவது படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் அப்படித்தான். எனவே தடங்கல்கள் எனக்கு புதிதல்ல. ஒரு நல்ல கதை தனக்கு தேவையான அனைத்தையும் தானாகவே அமைத்துக்கொள்ளும் என்பார்கள். அந்த நம்பிக்கையை பிடித்துக்கொண்டால் நிம்மதியாக இருக்க முடியும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

மேலும், எம்.ஜி.ஆர் மறைந்து பல வருடங்கள் ஆனாலும், அவரைப் பற்றிய நினைவுகள் இன்னும் ஆழமாக உள்ளன. இன்று எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினோம். இன்னும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். ‘ஜனநாயகன்’ படம் தாமதமானாலும், அது சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புகிறேன். இந்த படத்தின் இயக்குனர், படம் எந்த பிரச்னையும் இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று வேண்டியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கார்த்தி, எம்.ஜி.ஆர் ஒரு சூப்பர் ஹீரோ தான். அவரை இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் கொண்டு வந்துள்ளோம். இந்த படத்திற்கு பிரச்னைகள் வந்தபோதெல்லாம், எல்லாம் சரியாகிவிடும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கூறிக்கொண்டிருந்தேன். மன அழுத்தத்தை தலைக்கு ஏற்றிக்கொள்ள வேண்டாம்; உடல்நலம் பாதிக்கப்படக்கூடாது என்று அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். இந்த படம் வெளியாக அண்ணன் சூர்யா உட்பட பலர் உதவி செய்துள்ளனர். மேலும், அழகான நடிகை கீர்த்தி ஷெட்டியை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading