நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை கனகா இணைந்து நடித்த 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. கிராமத்து மண் வாசனையுடன், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம், பட்டி முதல் தொட்டி வரை எங்கும் பெரும் வரவேற்பை பெற்று, அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா இசையமைப்பில், “மாங்குயிலே பூங்குயிலே.. இந்த மான் உந்தன் சொந்த மான்..”, “ஊருவிட்டு ஊரு வந்து… குடகுமலை காற்றில் ஒரு…” உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தன. அதேபோல் கவுண்டமணி – செந்தில் இணையின் நகைச்சுவை காட்சிகள், 36 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. நடிகை தேவிகாவின் மகளான கனகா, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் ‘கரகாட்டக்காரன்’ படம் 425 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1989ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறப்பு விருதும் இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை கனகா தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக மாறினார். ரஜினிகாந்துடன் ‘அதிசய பிறவி’, பிரபுவுடன் ‘கும்பக்கரை தங்கையா’, விஜயகாந்துடன் ‘கோவில் காளை’, கார்த்திக்குடன் ‘பெரிய வீட்டு பண்ணைக்காரன்’, சரத்குமாருடன் ‘சாமுண்டி’ என முன்னணி நடிகர்களுடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். கடைசியாக மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ என்ற படத்தில் கனகா நடித்திருந்தார்.
இந்நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கரகாட்டக்காரன்’ படத்தின் முத்தையா – காமாட்சி ஜோடியான ராமராஜன் மற்றும் கனகா, சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
