நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது அவரது 25வது திரைப்படமாக அமைந்துள்ளதால், அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல் படமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கு 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவாவது படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில், வழக்கு தள்ளிப்போனதால் அவர்கள் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற சந்திப்பின் போது சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது, ‘ஜன நாயகன்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் பதிலளிக்கையில், “இது மிகவும் எதிர்பாராத சம்பவம். படம் தள்ளிப்போகும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு படங்களையும் ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. கடந்த 15 நாட்களில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளன. நான் யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. இந்த திரையுலகில் அனைவருக்கும் அவரவர் இடம் உள்ளது. நான் உண்மையிலேயே போட்டியிட விரும்பினால், ஒரு தடகள வீரராகவோ அல்லது குத்துச்சண்டை வீரராகவோ மாறியிருப்பேன்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், தனது 4, 5 திரைப்படங்கள் வெளியான சமயங்களிலும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும், அவை வெளியுலகிற்கு பெரிதாக தெரியவில்லை என்றும் கூறினார். ‘பராசக்தி’ படத்தின் விஷயத்தில் அந்த பிரச்னைகள் அதிகமாக வெளிப்பட்டதாகவும், தயாரிப்பு தரப்பினர் படங்களை சில மாதங்களுக்கு முன்பே தணிக்கைக்கு அனுப்பி சான்றிதழ் பெறுவது குறித்து உறுதியான திட்டமிடல் செய்வது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தார். பொதுவாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தனது படங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பிரச்னையுடன் தான் வெளியானதாகவும் அவர் கூறினார்.
