கதையின் நாயகனான செழியன் (சிவகார்த்திகேயன்) ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக ஒரு மாணவர் படையையே ஒன்றிணைத்து வழிநடத்துபவராக வருகிறார். அந்த மாணவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தாலும், அனைவரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்களின் போராட்டங்கள் சமூகத்தில் பரவலாக பேசப்படுகிறது. இத்தகைய சூழலில், மாணவர் சேனையை முன்னணியில் இருந்து வழிநடத்தி வந்த செழியனுக்கு ஒரு பெரிய இழப்பு நேரிடுகிறது. அதன் விளைவாக அந்த குழு சத்தமில்லாமல் கலைந்து போகிறது. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, கல்லூரி மாணவராக இருக்கும் செழியனின் தம்பி சின்னத்துரை (அதர்வா) மீண்டும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து, ஒரு குழுவை வழிநடத்த ஆரம்பிக்கிறார். இந்தப் போராட்டங்களிலிருந்து ஒதுங்கி நிற்க விரும்பும் செழியன், தன் தம்பியின் செயல்களைத் தடுக்கவும், அவனை கண்டிக்கவும் முயற்சி செய்யும் போது நிகழும் சம்பவங்களே ‘பராசக்தி’ திரைப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளன.

இயக்குநர் சுதா கொங்கரா, தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கப் போவதாக அறிவித்த தருணத்திலிருந்தே, இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. காரணம், இதுவரை அந்த நிகழ்வுகள் மொழிப்போராட்டமாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், அத்தகைய ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவத்தை திரையில் எவ்வாறு எடுத்துச் சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வியும், இன்றைய அரசியல் சூழலில் அது முழுமையாக வெளிப்படுமா என்ற சந்தேகமும் பலரிடையே எழுந்தன. அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, “மொழி என்பது வெறும் பேசுவதற்கான கருவி அல்ல; அது பல உரிமைகளையும் அடையாளங்களையும் சுமந்து நிற்கிறது” என்ற கருத்தை வலுவாக முன்வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.
சுதா கொங்கராவின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது, கருத்தியல் ரீதியாக மிக அழுத்தமான ஒரு விஷயத்தை அவர் இம்முறை கையாண்டிருக்கிறார். மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் காரணமாக, ‘ஆயுத எழுத்து’ போல மாணவர்களின் எழுச்சியை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம். அந்த வகையில், இந்த வரலாற்றுச் சம்பவத்தை கையிலெடுத்த அவர் அதை வீணாக்காமல் கவனமாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 1965-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் மொழித் திணிப்புக்கு எதிராக போராடியவர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆவணப்படுத்தியது முக்கியமானதாக அமைந்துள்ளது.
அன்றைய காலகட்டத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம், பஞ்சம் போன்றவை மக்களை வாட்டிக் கொண்டிருந்த சூழலில், ஹிந்தி மொழித் திணிப்பு எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ‘பராசக்தி’யின் சில காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்கின்றன. முக்கியமான வரலாற்றுப் பதிவை திரைக்கதை வடிவில் சொல்லும் போது, புனைவுச் சுவாரஸ்யத்திற்காக காதல் காட்சிகளோ அல்லது சண்டைக் காட்சிகளோ சேர்க்கப்படுவது இயல்பானதாக இருந்தாலும், இப்படத்தின் கால அளவைக் கணக்கில் எடுத்தால், முதல் பகுதியில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா காதல் காட்சிகள் கதையின் ஓட்டத்தைச் சற்றே சிதைப்பது போல் தோன்றுகிறது.
அந்த இடங்களில் சில நிமிடங்களை குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. மேலும், முழுக்க தமிழ் மொழியை மையமாகக் கொண்ட கதையில், கூடுதலாக தெலுங்கு மொழி கலந்தது சிறிது நெருடலை ஏற்படுத்துகிறது. மதுரை போன்ற காந்தியவாதிகள் சூழ்ந்த பகுதியில், அகிம்சை வழிப் போராட்டங்களையும் இன்னும் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஹிந்தி பிரச்சார சபாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் போல, மதுரை தமிழ்ச் சங்கத்திற்கும் ஏன் அதே அளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அதே சமயம், வசனங்கள் மிகவும் அழுத்தமாகவும் கவனமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஹிந்தி மொழிக்கு எதிரான படம் என்பதால், ஹிந்தி மொழிக்கும் அதன் திணிப்புக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கும் வசனங்கள் தெளிவாக இடம்பெற்றுள்ளன. மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி தொடர்பான காட்சிகள், அன்றைய அரசியல் சூழலை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது. முதன்முறையாக அரசியல் பின்னணி கொண்ட கதையில், மொழிப்பற்று நிறைந்த கதாபாத்திரத்தில் அவர் ஏமாற்றமில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். நடிகர் ரவி மோகன் முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அதிக வசனங்கள் இல்லாமல், கண் பார்வை மூலமாகவே தனது அதிகாரத்தையும், மாணவர்களை ஒடுக்குகிற தன்மையையும் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவருக்கான காட்சிகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதர்வாவுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. தன் சொந்த அண்ணனிடம் மொழித் திணிப்புக்கு எதிராக உரையாடும் காட்சிகளில் அவர் கவனம் ஈர்க்கிறார். இப்படத்தில் தெலுங்கு பெண்ணாக நடித்த ஸ்ரீலீலாவுக்கு நடிக்க போதுமான வாய்ப்புகளை இயக்குநர் வழங்கியுள்ளார். அதனால் பல காட்சிகளில் அவர் தனித்துவமாகத் தெரிகிறார். அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் பாத்திரத்துடன் நன்றாக பொருந்தியுள்ளது. முதல்வராக நடித்த நடிகருக்குப் பதிலாக இன்னும் பொருத்தமான நடிகரை தேர்வு செய்திருக்கலாம் என்ற குறையும் உள்ளது.
1960-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் ஆடைகள், மக்களின் தோற்றம், ரயில் நிலையங்கள், கட்டடங்கள் போன்றவை கலைத்துறையின் உழைப்பை வெளிப்படையாக காட்டுகின்றன. எந்த இடத்திலும் போலித்தனமான காட்சிகள் தோன்றக்கூடாது என்பதில் செட் அமைப்பும், வாகனங்களின் பயன்பாடும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி சில ஒலி பகுதிகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சொல்ல வந்த கருத்து புரியும் வகையிலேயே இருப்பதால், அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நீக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தால், இப்படம் இன்னும் அதிக அழுத்தத்துடன் வெளிப்பட்டிருக்கும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் தீ போல பரவிய மொழிப்பற்றில், செழியன் போன்ற பலரின் தொடர்ச்சியான போராட்டங்களாலும், அவர்கள் சந்தித்த இழப்புகளாலும் மொழியுரிமை எவ்வாறு காக்கப்பட்டது என்பதைக் படம் வலுவாக எடுத்துச் சொல்கிறது. ‘வாழ்க தமிழ்’ என்று எழுந்த ஒவ்வொரு குரலுக்குப் பின்னாலும், தங்கள் தாய் மொழிக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் தன்மானமும் பற்றும் எத்தகையது என்பதையும், தமிழ் உணர்வை ஆழமாக மக்கள் மனதில் பதியச் செய்கிறது.
