“மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்…’ஜனநாயகன்’ பட டைட்டில் கார்டை கண்டு துள்ளும் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படம் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் சுமார் 8 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியீட்டுக்கு முன்பாகவே இணையத்தில் சட்டவிரோதமாக படம் கசிந்ததாக தகவல்கள் வெளியானாலும், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்ற காரணத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையவில்லை. தமிழகத்தை விட முன்னதாகவே கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஜனநாயகன்’ படம் திரையிடப்பட்ட நிலையில், படத்தின் தொடக்கத்தில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் கார்டு இடம்பெற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனிடையே, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை புதுமையான தோற்றத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் வேடத்தில் கோட்சூட் அணிந்து தோன்றும் விஜய்யின் தற்போதைய தோற்றமும் படத்தின் சில முக்கிய காட்சிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

மறுபுறம், தமிழகத்தில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட கட்டணத்தில் இப்படத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் ரூ.183 முதல் ரூ.190 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொச்சியில் ரூ.700 வரையிலும், டெல்லியில் ரூ.900 வரையிலும், மும்பையில் ரூ.1,000 வரையிலும், பெங்களூருவில் ரூ.2,500 வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முதல் நாள் காட்சியை முன்னிட்டு ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல திரைப்பிரபலங்களும் படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளுக்கு வருகை தந்தனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading