பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘கான் சிட்டி’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் அர்ஜுன் தாஸ், இதுவரை ஏற்காத வகையில் ஒரு சிறுவனுக்கு தந்தையாக நடிக்கும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஜுன் தாஸ், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் தனது கதாபாத்திர அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். திரையரங்குகளுக்கு நேரில் சென்றபோது குடும்ப ரசிகர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் படத்தை ரசித்தது மகிழ்ச்சி அளித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குநர் ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும் போதே இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகர் குழு இருக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. பல அனுபவம் வாய்ந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர்களுடன் ஒரே போஸ்டரில் என் பெயரும் இடம்பெற்றது மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்” என்றார்.
தொடர்ந்து தனது தந்தை கதாபாத்திரம் குறித்து கூறிய அர்ஜுன் தாஸ், “முதல் முறையாக ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளில் அந்த சிறுவன் என்னை ‘அப்பா’ என்று அழைத்தபோது புதிய உணர்வு ஏற்பட்டது. இந்த படத்திற்கு பிறகு பலரும் என்னை அப்பா கதாபாத்திரத்திற்காக அணுகுகின்றனர். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
