‘ஜனநாயகன்’ படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் நாளைய நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளிப்படையாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

நேற்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அதிகாரத்தின் முற்றிலும் தவறான பயன்பாடு. எந்த ஒரு திரைப்படமும் ஒரே ஒரு நபரை மட்டுமே சார்ந்தது அல்ல; அது நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பையும், திரைக்கு வருவதற்காக முதலீடு செய்யப்பட்ட பெரும் பணத்தையும் உள்ளடக்கியது. இந்த நிலையில் படக்குழுவிற்கு அனைத்து வலிமையும் கிடைக்க வேண்டும். இது தளபதியின் படம், மேலும் அவரது கடைசி படம். அது எப்போது வெளியானாலும், இதுவரை இல்லாத அளவுக்கு நாம் அனைவரும் அதை கொண்டாடுவோம். தலைவர் படம் எப்போது ரிலீஸானாலும், அப்போதே நான் தியேட்டர் பக்கம் செல்வேன்,” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு நேற்று மாலை முதல் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்தனர். அதன்பிறகு, இன்று காலை ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று ஒருவர் பதிவிட்டிருந்ததை அஜய் ஞானமுத்து மறுபதிவு செய்து, “இது மிகப் பெரிய படங்களுக்கு கூட நிகழ முடியும் என்றால், இது யாருக்கும் நிகழ வாய்ப்புள்ளது. தணிக்கை வாரியம் இங்கு நியாயமாக செயல்படாமல், திரைப்படத் தொழில்துறை முழுவதிலும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதற்காக கண்டிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் சரியானதை ஆதரியுங்கள்,” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading