தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான ‘ஹலோ’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஹீரோ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனக்கான இடத்தை பிடித்தார். அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் ‘லோகா சாப்டர்-1 : சந்திரா’ என்ற மலையாள திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, ரத்தம் குடிக்கும் மோகினியாக அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமா வரலாற்றில் நடிகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட எந்த ஒரு திரைப்படமும் ரூ.100 கோடியை கடந்ததில்லை என்ற சாதனையை முறியடித்து, புதிய வரலாற்றையும் இந்த படம் படைத்துள்ளது.
இந்த சூழலில், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு, தற்போது பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெய் மேத்தா இயக்கத்தில், நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள புதிய இந்தி திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
