தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் போது தணிக்கை வாரியம் பின்பற்றும் விதிமுறைகளை என்ன தெரியுமா ?

நடிகர் விஜயின் கடைசி படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், படக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் திரையிடப்படும் எந்த ஒரு திரைப்படமும், 1952ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டத்தின் படி, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமான சிபிஎப்சி (CBFC) வழங்கும் தணிக்கைச் சான்றிதழை பெறுவது கட்டாயமாகும். அந்த சான்றிதழ் இல்லாமல் எந்த திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிட முடியாது.

இந்த நிலையில், சிபிஎப்சி ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் போது எந்தெந்த விதிமுறைகளை பின்பற்றுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு: ஒரு திரைப்படத்திற்கு A, U/A, U, U/A16, U/A12 என மொத்தம் ஐந்து வகையான தணிக்கைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள், ராணுவத்தை இழிவுபடுத்தும் காட்சிகள், இந்தியாவை அவமதிக்கும் காட்சிகள் ஆகியவை இடம்பெறக் கூடாது என்பது முக்கியமான விதியாக உள்ளது.

மேலும், நேரடியாக கத்தியில் குத்துவது போன்ற வெளிப்படையான வன்முறை காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தால், அவற்றை தணிக்கை குழு நீக்குமாறு உத்தரவிடும். பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள், இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகள், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் சொற்கள் அல்லது வசனங்கள் இருந்தால், அவற்றை மியூட் செய்ய அல்லது முற்றிலும் நீக்குமாறு தணிக்கை குழு அறிவுறுத்தும்.

தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில், தணிக்கை குழுவில் பெரும்பான்மை கருத்து என்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தணிக்கை குழுவில் உள்ள ஒரே ஒரு உறுப்பினர் கூட படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படும். அப்படியான சூழ்நிலையில், அந்த படம் மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

மறு ஆய்வுக் குழுவின் முடிவிலும் படக்குழுவுக்கு உடன்பாடு இல்லாதபட்சத்தில், அடுத்த கட்ட நடைமுறையாக ரிவைசிங் கமிட்டி என்ற செயல்முறைக்கு செல்ல முடியும். அதன்பிறகும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், படக்குழு நீதிமன்றத்தை அணுகி தங்களது தரப்பு நியாயங்களை முன்வைத்து, தங்களுக்கு ஏற்ற தணிக்கைச் சான்றிதழைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading