கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுடாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. பான் வேர்ல்டு படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம், வருகிற மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் நாயகன் யஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுகத்தை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, யஷ் நடித்துள்ள ‘ராயா’ எனும் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ முன்னோட்டம் வெளியாகியுள்ளது. காருக்குள் அமைந்துள்ள ஒரு படுக்கையறை காட்சியுடன் தொடங்கும் இந்த வீடியோ, தொடர்ந்து அதிரடியான வன்முறை காட்சிகளுடன் சுமார் மூன்று நிமிடங்கள் ஓடுகிறது. பரபரப்பும், வேகமும் நிறைந்த இந்த முன்னோட்டம், வெளியான உடனேயே ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முழுக்க முழுக்க ஆங்கில வசனங்களில், ஹாலிவுட் தரத்திற்கு இணையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப காட்சிகளுடன் யஷ் நடித்துள்ள இந்த வீடியோ, தற்போது வரை 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
இந்த சூழலில், இப்படியான வித்தியாசமான திரைப்படங்களின் முன்னோடி இயக்குனராக கருதப்படும் ராம்கோபால் வர்மா, இந்த வீடியோவை பார்த்த பிறகு தனது கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர், இயக்குனர் கீத்து மோகன்தாஸின் புகைப்படத்தை பகிர்ந்து, “யஷ் நடித்த டிரைலரைப் பார்த்த பிறகு, பெண்களின் அதிகாரத்தின் வலுவான சின்னமாக கீத்து மோகன்தாஸ் இருப்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எந்த ஆண் இயக்குனரையும் இந்தப் பெண்ணுடன் ஒப்பிட முடியாது. இப்படியொரு திரைப்படத்தை அவர்தான் இயக்கியுள்ளார் என்பதே எனக்கு இன்னும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது” என்று ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளார்.
