ஒரு சகோதரனாக நான் உங்களுடன் நிற்கிறேன் விஜய் அண்ணா… – நடிகர் ரவி மோகன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய், இது தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால், தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்கிய பின்னரே தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் காரணமாக, இதுவரை சான்றிதழ் கிடைக்காத நிலையில், நாளை படம் வெளியாவது சாத்தியமில்லை என்பதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால், ஒருபுறம் விஜய் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், மறுபுறம் விஜய்யின் திரைப்படத்தை குறிவைத்து மத்திய அரசு அரசியல் அழுத்தம் கொடுப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைப் போலவே, சென்சார் வாரியத்தையும் மிரட்டல் கருவியாக மோடி அரசு பயன்படுத்தி வருகிறது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரவிமோகன், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இதயம் கனக்கிறது விஜய் அண்ணா.. உங்களது கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக, ஒரு சகோதரனாக நான் உங்கள் பக்கம் நிற்கிறேன். உங்களுக்கு என்று ஒரு வெளியீட்டுத் தேதி தேவையில்லை. நீங்கள் திரையில் தோன்றுவதுதான் உண்மையான ‘ஓப்பனிங்’. அந்த தேதி எதுவாக இருந்தாலும் சரி, அன்றுதான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பம்!” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரவிமோகன், ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், அதுவும் முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading