விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கலா? தணிக்கை சான்றிதழுக்காக காத்திருக்கும் படக்குழு!

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை மறுநாள், அதாவது ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நேற்று (ஜனவரி 6) இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். அதன்படி, இன்று மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடும்போது, “தணிக்கை சான்றிதழ் வழங்காமல் நிறுத்துவதற்கான அதிகாரம் தணிக்கை வாரியத் தலைவருக்கு உள்ளது. தணிக்கை குழு உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்ததன் காரணமாகவே படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கையில் திருப்தி இல்லை என்றால் மறுஆய்வுக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும். முதல் தணிக்கை குழுவில் இருந்த ஐந்து பேர் மறுஆய்வுக் குழுவில் இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக வேறு ஐந்து பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்படும். அந்த புதிய உறுப்பினர்கள் படத்தை முழுமையாக பார்வையிட வேண்டியுள்ளதால், இதற்காக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதற்கு நீதிபதி, படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட தகவலை படக்குழுவுக்கு ஏன் உடனடியாக தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், “ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி விண்ணப்பித்தது. படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை ஜனவரி 5-ஆம் தேதியே தயாரிப்பாளரிடம் தெரிவித்துவிட்டோம். தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்போ அல்லது மறுக்கப்படுவதற்கு முன்போ நீதிமன்றத்தை அணுக முடியாது. மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 20 நாட்களுக்குள் புதிய குழு அமைக்கப்பட வேண்டும். மேலும், ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய குறைந்தபட்சம் 15 நாட்கள் தேவைப்படும். எனவே, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு நான்கு வாரங்கள் அவகாசம் தேவை. விதிமுறைகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே எங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதில் எங்களுக்குத் தீய நோக்கம் எதுவும் இல்லை. தணிக்கை குழுவின் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று மட்டுமே தணிக்கை குழுவுக்கு உத்தரவிட முடியும். இந்த விவகாரம் மத்திய அரசின் முடிவு அல்ல என்று விளக்கம் அளித்தனர்.

இதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “ஜனநாயகன் படத்தை முதலில் பார்த்த தணிக்கை குழுவினர் ஒருமனதாக ‘யுஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர். தணிக்கை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் புகார் அளிக்க முடியாது; பரிந்துரைகள் மட்டுமே வழங்க முடியும். படம் பார்த்த ஐந்து பேரும் தனித்தனியாக தங்களது பரிந்துரைகளை பதிவு செய்திருந்தனர். அப்படியிருக்க, ஒரே ஒரு உறுப்பினர் எப்படி புகார் அளிக்க முடியும்? தணிக்கை உறுப்பினர் ஒருவர் புகார் அளித்தது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று. வழக்கமாக விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். இந்த படத்தில் சுமார் ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு ஜனநாயகன் படத்தை இழுத்தடிக்கிறார்கள். குறித்த நேரத்தில் படம் வெளியாகவில்லை என்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டனர்.

இதற்கு நீதிபதி, தணிக்கை வாரியத்தின் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை தயாரிப்பு நிறுவனம் பின்பற்றியே ஆக வேண்டும்” என்று தெரிவித்தார். அதற்கு தயாரிப்பு நிறுவனம், “பெரும்பான்மை தணிக்கை உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லை என்றால் மட்டுமே மறுஆய்வுக்கு அனுப்ப வேண்டும். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை எப்படி செல்லாததாக கூற முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், “ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள் முழுமையாக நேர்மையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், “நாளை மறுநாள் பட ரிலீஸ் என்பதால், இன்றே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதற்கு நீதிபதி, இன்றே அனைத்து வாதங்களையும் நிறைவு செய்யுங்கள். முடிந்தவரை நாளை மறுநாள் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறேன் என்று கூறினார்.

ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தேதியிலேயே தீர்ப்பு வரலாம் என நீதிபதி கூறியிருப்பது, ஜனநாயகன் படக்குழுவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதிலும், முடிந்தவரை என்ற வார்த்தையுடன் தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளதால், ஜனவரி 9-ஆம் தேதியாவது தீர்ப்பு வெளியாகுமா என்பது இன்னும் உறுதியில்லாத நிலையாக உள்ளது. அன்றைய தினம் தீர்ப்பு வந்தாலும், உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுமா அல்லது ஓரிரு நாட்கள் தாமதமாகுமா என்பதும் இன்னும் தெரியவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading