ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு, கடைசி நேரம் வரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால், படக்குழு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்ட போதிலும், வெளியீடு அறிவிக்கப்பட்ட அதே நாளில் தான் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டதால், வேறு எந்த மாற்றுவழியும் இல்லாமல் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் படக்குழு ஒத்திவைத்துள்ளது.

அதேபோல், ஜனவரி 10ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்த ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்து உருவாகும் சிக்கல்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, தமிழ் சினிமா தற்போது கடும் சிரம நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலைக்கு எதிராக, திரையுலகைச் சேர்ந்தவர்கள் இப்போது தான் மெதுவாக தங்களின் குரலை உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.
அந்த வரிசையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சினிமாவை நேசிக்கும் ஒருவராக சில கருத்துகளை முன்வைத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சல்லியர்கள்’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையில், விஜய் நடித்த பெரிய பட்ஜெட் திரைப்படமான ‘ஜனநாயகன்’ கூட, சென்சார் தாமதம் காரணமாக ஜனவரி 9ஆம் தேதி வெளியிட முடியாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், பல இடங்களில் முன்பதிவு தொடங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர், இது சினிமாவுக்கு மிகவும் கடினமான காலகட்டம் என குறிப்பிட்டு, திரையரங்குகள் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் எளிதாக கிடைக்கின்றன. ஆனால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு அந்த வாய்ப்புகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அவற்றுக்கான ஒரே வருவாய் ஆதாரம் திரையரங்குகள் மட்டுமே. ஆனால், அதே திரையரங்குகளே சிறிய படங்களை வெளியிட தயங்குவது, இறுதியில் சினிமா துறையையே அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தற்போது பின்பற்றப்படும் திரைப்பட சென்சார் நடைமுறைகளில் உள்ள கடுமையான காலக்கெடுகள், குறிப்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு சென்சார் அமைப்புகளின் விதிமுறைகள், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்களை, வெளியீட்டுக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே முழுமையாக தயாரித்து முடிக்க வேண்டும் என்ற நிலை, நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற பல நடைமுறை சிக்கல்களை நெறிப்படுத்தி, தயாரிப்பாளர்களுக்கு சற்று எளிதாக்க வேண்டும். இல்லையெனில், பண்டிகை காலங்களில் கூட பெரிய படங்களை வெளியிட முடியாமல் ஒத்திவைக்கும் நிலை தொடரும்; அது இறுதியில் முழு சினிமா துறையையும் அழிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
இறுதியாக, ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட விரோதங்கள் மற்றும் வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு, திரைப்பட சகோதரத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து கலையைக் காப்பாற்ற வேண்டும் என்றும், “சினிமாவைக் காப்பாற்றுங்கள்” என்ற அழைப்பை கார்த்திக் சுப்புராஜ் தனது பதிவின் மூலம் முன்வைத்துள்ளார்.
