ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்காத நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு, படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள வரும் 9-ம் தேதி காலைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தவிர்க்கமுடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மிகுந்த மனவருத்தத்துடன் இந்த தகவலை எங்கள் மதிப்பிற்குரிய பங்குதாரர்கள் மற்றும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு, எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை நாங்கள் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். இந்த முடிவு எங்களுக்கெல்லாம் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.
அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் உறுதியான ஆதரவே எங்களின் மிகப்பெரிய பலம். அது முழு ‘ஜன நாயகன்’ படக்குழுவிற்கும் அளவிட முடியாத முக்கியத்துவம் கொண்டதாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
