‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ போன்ற திரைப்படங்களை இயக்கி திரையுலகில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.
இந்த திரைப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரே திரைப்படத்தில் நான்கு தனித்தனியான கதைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்த படத்தை கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதுடன், பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.
