கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் (KSRTC) விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார். கே.எஸ்.ஆர்.டி.சி-க்காக எந்தவித ஊதியமும் பெறாமல் இலவசமாக சேவை செய்யத் தயாராக இருப்பதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், இனி கே.எஸ்.ஆர்.டி.சி தொடர்பான விளம்பரங்களில் மோகன்லால் இடம்பெறுவார். எந்த கட்டணமும் இன்றி விளம்பர படங்களில் நடிக்கவும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் அறிவித்துள்ளார்.

மோகன்லாலை வைத்து சில விளம்பர படங்களை உருவாக்குவதற்கான திட்டத்தையும் கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் வகுத்து வருகிறது. கேரள அரசு போக்குவரத்து கழகம் தற்போது மொத்தம் 4,952 பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனுடன், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கேரள அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு டிக்கெட் கட்டண வருமானம் மட்டுமல்லாமல், போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து நிலையங்கள், டெப்போக்களில் உள்ள கடைகளின் வாடகை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
