மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் “99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு”. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் வரிகளை எம்.எஸ். மூர்த்தி எழுதியதுடன், அவரே தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இப்படத்தில் சபரி மற்றும் ரோகித் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரச்சிதா மகாலட்சுமி மற்றும் ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பவன்கிருஷ்ணா, கே.ஆர். விஜயா, கே.எஸ். வெங்கடேஷ், எஸ். சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இந்தப் படத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ். மூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதே நிகழ்வில், மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகவுள்ள இரண்டாவது திரைப்படமான “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வெளியிடப்பட்டது.
படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் எம்.எஸ். மூர்த்தி பேசுகையில், “சென்னையில் உள்ள 99 வீடுகளை கொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை மையமாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் படத்திற்கு ‘99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு’ என்று பெயர் வைத்தோம். அந்த குடியிருப்பில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள், அங்கு வசிக்கும் மக்களை பயமும் பதற்றமும் அடையச் செய்கின்றன. இவ்வாறு நடப்பதற்கான காரணம் என்ன? அதன் பின்னணியில் இருப்பது யார்? என்பதை சபரி, ரச்சிதா, ஸ்வேதா மற்றும் என்னுடன் இணைந்து கண்டறிய முயற்சிப்பதே கதையின் மையம். அந்த முயற்சி எங்கு முடிகிறது என்பதே திரைக்கதை” என்று தெரிவித்துள்ளார்.
