எது கை கொடுக்கவில்லை என்றாலும், படிப்பு மட்டும் நிச்சயம் கை கொடுக்கும்… மாணவர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை!

‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில் தமிழக அரசின் லேப்டாப் திட்டத்தை, நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் இந்தத் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அரசு பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி உரையாற்றுகையில், “தமிழ்நாட்டிற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால், சொத்தை விற்றாவது அவனை படிக்க வைக்க வேண்டும் என்று கல்விக்கு முதன்மை அளிக்கும் மாநிலம் தமிழ்நாடு. நான் சினிமாவிற்கு செல்ல விரும்புகிறேன் என்று என் அப்பாவிடம் கூறியபோது, ‘எது எது கை கொடுக்கவில்லை என்றாலும், படிப்பு மட்டும் நிச்சயம் கை கொடுக்கும். அதனால் படி’ என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு நான் இன்ஜினியரிங் மற்றும் மாஸ்டர்ஸ் படிப்புகளை முடித்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு கல்விதான் மிகப்பெரிய துணையாக இருக்கிறது. எது சரி, எது தவறு என்பதை புரிந்து கொள்ளவும், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை உணரவும் கல்வியே அடிப்படை. நான் அமெரிக்காவில் படித்த போது, அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் பெரிய பொறுப்புகளில் இருப்பதை பார்த்தேன். தற்போது ஏஐ வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது மிக முக்கியமான முடிவு. இதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்திய அரசுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏஐ காரணமாக வேலை வாய்ப்புகள் குறையும் என்று சிலர் கூறினாலும், பல தொழில் முனைவோர் இந்தியாவில் இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்” என்று கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading