பீமன் கதையை படமாக்குகிறாரா நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி?

மறைந்த பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், ‘மகாபாரதத்தை’ அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘ரண்டமூழம்’ நாவலை மையமாக வைத்து, நடிகர் மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான திரைப்படம் உருவாக இருப்பதாக 2016 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பீமனை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த கதையை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர். ஷெட்டி தயாரிப்பதாகவும், ஏற்கனவே மோகன்லாலை வைத்து ‘ஒடியன்’ படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானபோது, இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக ‘ரண்டமூழம்’ அமையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதில் ஏற்பட்ட தொடர் காலதாமதம், கதாசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், கதையின் உரிமையை திரும்ப வழங்குமாறு எழுத்தாளர் நீதிமன்றத்தை நாடிய விவகாரம், அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் பின்வாங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அறிவிப்பு வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இந்த திரைப்படம் கைவிடப்பட்டது. ஒருவேளை எம்.டி. வாசுதேவன் நாயர் கதையுரிமை தொடர்பான விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு செல்லாமல், சுமூகமாக தீர்வு கண்டிருந்தால், இந்த திரைப்படம் நிறைவேறியிருக்கலாம் என்றும் அந்த நேரத்தில் பேசப்பட்டது.

தற்போது, எம்.டி. வாசுதேவன் நாயர் மறைந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், ‘ரண்டமூழம்’ கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குநர் ரிஷப் ஷெட்டி தீவிர ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக எம்.டி. வாசுதேவன் நாயரின் குடும்பத்தாருடன் அவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘காந்தாரா’ படத்தின் இரண்டு பாகங்களையும் புராண, வரலாற்றுப் பின்னணியில் இயக்கிய அனுபவத்தின் அடிப்படையில், பீமன் கதையையும் திரையில் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுடன் தான் ரிஷப் ஷெட்டி இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading