இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், முக்கியமான வேடத்தில் நடிகை மமிதா பைஜூவும் நடித்துள்ளார். இதுதவிர, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

தீவிர அரசியல் பயணத்தில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’ என கூறப்படும் நிவையில் இந்த படத்திற்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தின் டிரைலர் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. வெளியான குறுகிய நேரத்திலேயே இந்த டிரைலர் அதிக பார்வையாளர்களை கவர்ந்து, தற்போது யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சுமார் ரூ.380 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ரூ.220 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் எச்.வினோத்துக்கு ரூ.25 கோடி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடி, நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ரூ.3 கோடி, நடிகை மமிதா பைஜூவிற்கு ரூ.60 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
