தெலுங்கானா காவல்துறையும் தெலுங்கு பிலிம் சேம்பரும் புதிய ஒப்பந்தம்… என்ன தெரியுமா?

திரைப்படத் துறையில் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக ‘பைரசி’ இணையதளங்கள் இருந்து வருகின்றன. ஒரு காலத்தில் திருட்டு விசிடிக்கள் மூலம் ஏற்பட்ட பாதிப்பு, இணைய வளர்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவு செய்து, அவற்றை இணையதளங்களில் வெளியிடும் அளவிற்கு மாறியுள்ளது. தற்போது மொபைல் ஆப்கள் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் முழு படங்களும் சட்டவிரோதமாக பகிரப்படும் நிலை உருவாகியுள்ளது.

சமீப காலமாக தெலுங்கானா காவல்துறை, பைரசி செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பைரசியாக படங்களை பதிவேற்றம் செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தற்போது தெலுங்கானா காவல்துறையும் தெலுங்கு பிலிம் சேம்பரும் இணைந்து, நேற்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, பைரசி மூலம் புதிய திரைப்படங்கள் பரவுவதை இரு தரப்பும் இணைந்து கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். கண்காணிப்பு அமைப்புகள், திருட்டுத்தனமாக பதிவேற்றப்பட்ட உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கம் செய்தல், சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைரசி பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் இந்த நடவடிக்கையால் அதிக பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. தமிழ்த் திரையுலகிலும் இதுபோன்ற ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை காவல்துறையும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களும் இணைந்து முன்னெடுக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading