இயக்குநர் எச். வினோத், தற்போது விஜய் நடிப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையின் வெளியீடாக வரும் இப்படம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அரசியல் சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் திரைப்படம், உங்களுடைய ரசிகனும் சகோதரனுமான நான் உட்பட அனைவரது இதயங்களையும் நிச்சயமாக கொள்ளை கொள்ளும். இந்த படம் வெற்றிபெற சகோதரர் எச். வினோத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக, ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
