“பைசன்” திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் இயக்கும் புதிய படைப்பாக “மஞ்சணத்தி” உருவாகி வருகிறது. இப்படத்தில் இளையராஜா இசையமைக்க, கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேனி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து “மஞ்சணத்தி” படத்தின் கதைக்களம் குறித்து மாரி செல்வராஜ் சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மிகவும் எதார்த்தமான பின்னணியில் உருவாகும் இந்தக் கதைக்கு பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோரை தேர்வு செய்ததற்கும் குறிப்பிட்ட காரணம் இருப்பதாகவும், அவர்களது கதாபாத்திரத் தேர்வு படத்துடன் இயல்பாக பொருந்தும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கதையின் களம் திருநெல்வேலியில் தொடங்கி காஷ்மீர் வரை பயணிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் படமாக்கப்பட உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், தனது திரைப்பயணம் கதிருடன் தொடங்கியதை நினைவுகூர்ந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளியை “மஞ்சணத்தி” ஈடுசெய்யும் என்றும் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
