மதி மாறன் இயக்கத்தில் தான் நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சூரி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்தும், தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.அப்போது பேசிய அவர், “மண்டாடி” திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாய்மர படகு போட்டியை உலக அளவில் கொண்டு செல்லும் படமாக இது அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். மீனவ சமூகத்திற்கு மரியாதை செலுத்தும் படைப்பாகவும் இப்படம் இருக்கும் என்று கூறினார்.
மீனவர்களின் வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த சூரி, அதை படம் பார்க்கும்போது அனைவரும் புரிந்துகொள்ள முடியும் என்றார். வெறும் பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட படமாக இல்லாமல், சமூகத்திற்கு தேவையான விஷயத்தையும் பேசும் திரைப்படமாக “மண்டாட்டி” இருக்கும் என குறிப்பிட்டார். மீனவர் கதாபாத்திரத்தில் நடித்ததை தனது வாழ்க்கையில் கிடைத்த முக்கியமான அனுபவமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், காமெடியனாக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்றும் சூரி கூறினார். மக்கள் ஆதரவு இருந்தால் எந்த துறையிலும் ஒருவர் தொடர்ந்து பயணிக்க முடியும் என்றும், அவர்களுக்கு பயனுள்ள மற்றும் தேவையான படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் குறித்தும் பேசிய சூரி, காலை முதல் மாலை வரை சட்டசபையில் நடைபெறும் விஷயங்களை மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளதாக கூறினார். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து பேசுவது ஆரோக்கியமான மாற்றம் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், முதல்வர் விஜய் இல்லாத சினிமா துறையை பார்க்கும்போது ஒரு வெறுமை இருப்பதாகவும் தனது கருத்தை தெரிவித்தார்.
தனது அடுத்த திரைப்படம் “அயலான்” படத்தை இயக்கிய இயக்குநருடன் உருவாக உள்ளதாக கூறிய சூரி, அதன் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். “மண்டாடி” மூலம் மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொள்ளும் வலிகளையும் நெருக்கமாக புரிந்துகொண்டதாக கூறிய அவர், மீனவர்கள் எப்போதும் பாதுகாப்புடனும் நலத்துடனும் வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார். அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு உரிய வாய்ப்புகளும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்றும் சூரி வலியுறுத்தினார்.
—
