தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக அறியப்படும் பவன் கல்யாண், தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அரசியல் பொறுப்புகள் அதிகரித்திருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்பந்தமான ஹரிஹர வீர மல்லு மற்றும் தே கால் ஹிம் ஓஜி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை விரைவாக நிறைவு செய்து வழங்கினார். அந்த படங்களும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள உஸ்தாத் பகத்சிங் படத்தின் பணிகளை முடித்துக் கொடுக்கும் முயற்சியில் பவன் கல்யாண் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை பவன் கல்யாண் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த புதிய படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம்சரண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், 2019ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வரலாற்றுப் படமான சைரா நரசிம்மர் ரெட்டியையும் இயக்கியவர். அதேபோல், 2023ஆம் ஆண்டு அகில் நடிப்பில் வெளியான ஏஜென்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தோல்வியை சந்தித்தது. இந்த பின்னணியிலேயே தற்போது பவன் கல்யாண் புதிய படத்தை இயக்க சுரேந்தர் ரெட்டியுடன் இணைந்துள்ளார்.
