தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகி பாபு, கடந்த சில ஆண்டுகளாக கதையின் நாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதே போல் காமெடியன்களாக இருந்த சந்தானம், சூரி உள்ளிட்டோர் முழுநேர ஹீரோக்களாக மாறிவிட்ட நிலையில், தற்போது பிரதான காமெடி நடிகராக யோகி பாபு மட்டுமே தமிழ் திரையுலகில் நிலைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யோகி பாபு தனது திரையுலகப் பயணத்தில் 300வது படத்தை எட்டியுள்ளார். அவரது 300வது திரைப்படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ் மோகன் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தலைவன் தலைவி படத்திற்குப் பிறகு கருப்பு, ஜெயிலர்-2, தி ராஜா சாப், அட்லீ – அல்லு அர்ஜுன் படம் ஆகியவற்றில் தொடர்ந்து நடித்துவரும் யோகி பாபு, அடுத்ததாக ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார்.
இதுகுறித்து யோகி பாபு கூறும்போது, “இது எனது 300வது படம். இத்தனை படங்களுக்கு எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும். தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை” என தெரிவித்துள்ளார்.
