காமெடி நடிகராக திரையுலகில் அறிமுகமான சூரி, தற்போது கதையின் நாயகனாக நிலைபெற்றுள்ளார். அவர் கதாநாயகனாக நடித்த விடுதலை, கருடன், மாமன் ஆகிய திரைப்படங்கள் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தற்போது தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், ‘மண்டாடி’ என்ற திரைப்படத்தில் கடந்த சில மாதங்களாக சூரி நடித்துவருகிறார். இந்த படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் நெருங்கிய உதவியாளராக இருந்து, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘செல்பி’ திரைப்படத்தை இயக்கிய மதிமாறன் இயக்குகிறார். ராமநாதபுரம் கடல்பகுதியில் நடைபெறும் பாய்மரப் படகு போட்டியை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

‘மண்டாடி’ படத்தின் பட்ஜெட் சுமார் 75 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. சூரி கதாநாயகனாக நடிக்கும் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படமாக இது அமைந்துள்ளது. விடுதலை மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களை தயாரித்த எல்ரெட்குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீட்டிற்குப் பிறகே சூரி கதாநாயகனாக நடித்துள்ள மற்ற திரைப்படங்கள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
