நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியீட்டுக்கு முன்பான தொழில்நுட்ப வேலைகளில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து, நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா46’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன. படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இயக்குனர் வெங்கி அட்லூரி, நடிகர் துல்கர் சல்மானை வைத்து ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
