‘அனிமல்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ‘ஸ்பிரிட்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், பிரபாஸின் திரை வாழ்க்கையில் 25வது படமாக உருவாகி வருகிறது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய் மற்றும் பழம்பெரும் நடிகை காஞ்சனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்து வருகிறார்.

போலீஸ் கதையை மையமாகக் கொண்டு, முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக ‘ஸ்பிரிட்’ உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புத்தாண்டு தினமான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ‘ஸ்பிரிட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில், உடலில் காயங்களுடன் நிற்கும் பிரபாஸுக்கு சிகரெட் பற்ற வைக்க திரிப்தி டிம்ரி உதவுவது போன்ற காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் வெளியானதும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
