இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரான ரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘அரிசி’. எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை பாடலாசிரியர் அறிவு மற்றும் பிரபல பாடகர் வேடன் இணைந்து பாடியுள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் பேசுகையில், “படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விவசாயத்தை மையமாகக் கொண்டு ஒரு பாடலை இளையராஜா உருவாக்கியுள்ளார். அந்த பாடலுக்கு அறிவு பாடல் எழுதியுள்ளார். பிரபல பாடகர் வேடன் மற்றும் அறிவு இணைந்து அந்த பாடலை பாடியுள்ளனர். விவசாயிகளின் போராட்டமும், அவர்களின் கடினமான வாழ்வியலும் பிரதிபலிக்கும் வகையில் இந்த பாடலின் கரு அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அரிசி’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி மாத இறுதியில் நடைபெற உள்ளதாகவும், பிப்ரவரி மாதத்தில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார். கேரளாவில் முன்னணி பாடகராக உள்ள வேடனின் கச்சேரிகளுக்கு அங்கு தனி வரவேற்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் அறிவு பாடல்களுக்கு ஏற்கனவே பெரும் ஆதரவு உள்ளது. இவ்விருவரும் இளையராஜாவுடன் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் கவனம் பெற்றுத் தருகிறது.
