மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம் 2’வும் அதே அளவிலான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘திரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரவுள்ள கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ஜீத்து ஜோசப் பேசுகையில், “இந்த மூன்றாம் பாகம் முதல் பாகத்தின் பார்முலாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் ஒரு கதை சொல்லும் பாணியில் நகர்ந்தது. ஆனால் முதல் பாகத்தில் தொடர்ச்சியான சம்பவங்களே முக்கியமாக இருந்தன. அதே பாணியில்தான் இந்த மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தை விட இன்னும் அதிகமான உணர்வுகளுடன் இந்த படம் இருக்கும். ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் இதற்கு மேல் என்ன நடக்க முடியும் என்பதையே இந்த பாகத்தில் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
