மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார், சஞ்சய் தத், போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வருகிற சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்டமான விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய நடிகை நிதி அகர்வால், “இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான பிரபாஸுடன் இணைந்து நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல உள்ளது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருக்கு உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸ் அடிப்பதும், ஸ்டேடியத்தில் ஒரு சிக்ஸ் அடிப்பதும் வேறுபட்ட விஷயங்கள். அந்த அளவுக்கு பெரிய ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ்.
‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் மாருதிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். சப்தகிரி, VTV கணேஷ் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. என் சக நடிகைகளான மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் உடன் பணியாற்றியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்” என்று கூறினார்.
