நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல்!

நடிகர் அஜித் குமார் நடித்த ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து, அவர் தனது விருப்பமான கார் ரேசிங்-ல் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அவரது ‘அஜித் குமார் ரேசிங்’ அணி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது.

இந்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிரும் வகையில், தனது கார் ரேசிங் பயணத்தை ஆவணப்படமாக உருவாக்க அஜித் குமார் திட்டமிட்டார். இதற்காக இயக்குனர் ஏ.எல். விஜயை அழைத்து, அந்த ஆவணப்படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். இதன் தொடர்ச்சியாக இயக்குனர் விஜய் மலேசியா சென்று, அங்கு அஜித் குமாரை நேரில் சந்தித்து ஆவணப்படம் தொடர்பான விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்த திட்டம் முழுமையாக நிறைவேறிய பின்னர், இதை ஆவணப்படமாக வெளியிடலாமா அல்லது முழுநீள திரைப்படமாக வெளியிடலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஏ.எல். விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, இந்த திட்டத்தின் டிரைலர் போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு, அதற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அந்த வீடியோவை பகிர்ந்த ஜி.வி. பிரகாஷ், மீண்டும் ஒருமுறை அஜித் உடன் கைகோர்க்கிறேன்.  இயக்குனர் விஜய் மற்றும் சுரேஷ் சந்திராவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த ஆவணப்படத்திற்கு மியூசிக் அமைக்கும் பணியை தொடங்கியதை சுட்டிக்காட்டும் வகையில் ‘வொர்க் மோட்’ என்ற குறிப்புடன் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தை 2026 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading