நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த ‘சிறை’ திரைப்படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியுள்ளார். ‘7 Screen Studio’ லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில், அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக உணர்வுடன் கூடிய கதையமைப்பால் படம் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் சங்கர் ‘சிறை’ படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சிறை’ உண்மையிலேயே ஒரு சிறந்த படம். பல இடங்களில் கண்ணீர் சிந்தினேன். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவற்றில் நடித்த நடிகர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன. விக்ரம் தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பு, அவர்களது கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாக பிரதிபலித்தது.
இந்த அருமையான படத்தை வழங்கிய தயாரிப்பாளர் லலித் குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குநர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை ‘சிறை’ பிடித்துவிட்டார். இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும், இன்றைய காலத்திற்கு பொருத்தமானதாகவும் இருந்தது என்று இயக்குநர் சங்கர் பாராட்டியுள்ளார்.
