நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ திரைப்படம் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையுடன் இந்த படம் தயாராகி உள்ளது. இந்நிலையில், ‘சிறை’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், சிறை திரைப்படத்தை பார்த்தேன். மனதிற்கு மிகுந்த நிறைவு கிடைத்தது. இத்தகைய கதைகளை, எந்த வகையான மனிதர்களின் வாழ்க்கையை, எந்த வகையான அரசியல் பார்வையை, எந்த வகையான பற்று மற்றும் உணர்வுகளை சினிமாவாக மாற்ற வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்த படைப்பாளியின் வருகை, அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் வழங்கும். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு அசாத்தியமான படைப்பாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள இயக்குநருக்கும், இப்படிப்பட்ட கதைகள்தான் வேண்டும் என்று களம் இறங்கியுள்ள நடிகர் விக்ரம் பிரபுவுக்கும், தயாரிப்பாளருக்கும், சிறப்பான இசையை வழங்கியுள்ள ஜஸ்டின் பிரபாகருக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும். ‘சிறை’ திரைப்படத்திற்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
