‘தி ராஜா சாப்’ படம் உங்களை திருப்திபடுத்தவில்லை என்றால் என் வீட்டிற்கே வந்து விமர்சிக்கலாம் – இயக்குனர் மாருதி!

இயக்குநர் மாருதி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ராஜா சாப்’. பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகைகள் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், நடிகர் சஞ்சய் தத், நடிகை ஜரினா வாஹேப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ‘தி ராஜா சாப்’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பலமுறை வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தடைகளையும் கடந்து ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இதற்கிடையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், டிரைலர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ், இயக்குநர் மாருதி, நடிகைகள் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது உணர்ச்சிவசப்பட்ட இயக்குநர் மாருதி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரை நடிகர் பிரபாஸ் அருகில் சென்று தேற்றி ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் மாருதி பேசுகையில், “இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம், அவரது ரசிகர்களையும், அவரை விமர்சிப்பவர்களையும் கூட நிச்சயமாக மகிழ்விக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஒருவேளை படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சதவீதம் கூட ஏமாற்றம் ஏற்பட்டால், அவர்கள் நேரடியாக என் வீட்டிற்கு வந்து விமர்சிக்கலாம். பிரபாஸை உண்மையாக நேசிக்கும் யாராவது எங்களை ஏமாற்றிவிட்டதாக நினைத்தால், கோண்டாபூர் பகுதியில் உள்ள வில்லா எண் 16-ல் அமைந்துள்ள கொல்லா லக்ஸரிக்கு வரலாம். அங்குதான் என் வீடு உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “கல்லறைக்குச் செல்லும் போதும் கூட நான் வழக்கமாக அழுவதில்லை. ஆனால் இப்போது வரும் இந்த கண்ணீர் இயற்கையானது. கடந்த சில ஆண்டுகளாக நான் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். இந்த படம் ரிலீசாகாது என்றெல்லாம் பலர் கூறினார்கள். என்மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நான் மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது நான் மும்பைக்கு சென்று பிரபாஸை சந்தித்தேன். அப்போது அவர் ராமர் வேடத்தில் இருந்தார். அந்த ராமர் தான் இந்த ஆஞ்சநேயருக்கு (மாருதி) ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு வழங்கியுள்ளார்” என உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading