மன்னர் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களையும், நவீன காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மறு ஜென்மக் கதையாக இந்த படம் அமைந்துள்ளது. இதில் மோகன்லால், மன்னர் விஜயேந்திர விருஷபா மற்றும் நிகழ்காலத்தில் தொழிலதிபர் ஆதி தேவா வர்மா என இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இயல்பாகவே கம்பீரமான தோற்றம் கொண்ட மோகன்லால், மன்னர் காலத்தில் தோன்றும் கெட்டப்பில் இன்னும் அதிகமாகப் பொருந்தி வருகிறார். மன்னர் காலகட்டத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் தனது வீரமும், தீரமும், பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களை அசரடிக்கிறார். அதே நேரத்தில், மகனுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற பதற்றத்தை இரு காலகட்டங்களிலும் வெளிப்படுத்துவதும், ஒரு கட்டத்தில் நிலைமை தன் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது என்பதை உணர்ந்து தவிப்பதும், ஒரு பாசமிக்க தந்தையின் மனநிலையை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மோகன்லாலின் மனைவியாகவும், மன்னர் காலத்தில் அரசியாகவும், நிகழ்காலத்தில் அவரது நெருங்கிய தோழியாகவும் என இரண்டு விதமான தோற்றங்களில் ராகினி திவிவேதி நடித்துள்ளார். குறிப்பாக மன்னர் காலத்தில் கத்தி சண்டை வீராங்கனையாக அவர் தோன்றும் காட்சிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன. மோகன்லாலுக்கு பதிலாக நேரடியாக களம் இறங்கி எதிராளியுடன் அவர் மோதும் கத்தி சண்டைக் காட்சி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த சண்டையில் நிகழும் அவரது முடிவு பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்கச் செய்வதுடன், மறு ஜென்மக் கதைக்கு அடிப்படையாகவும் மாறுகிறது.
மோகன்லாலின் மகனாக சமர்ஜித் லங்கேஷ் நடித்துள்ளார். கன்னட சினிமாவிலிருந்து தெலுங்கு சினிமாவிற்கு புதுவரவாக அறிமுகமாகியுள்ள அவர், கம்பீரமான தோற்றத்துடன் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக செயல்படுகிறார். தந்தையுடன் மோதும் காட்சிகளிலும் எந்தவித குறையும் இன்றி தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளார். மோகன்லாலின் விசுவாசிகளாக நடிகர் அஜய் மற்றும் அவரது மனைவியாக நடித்துள்ள நேகா சக்சேனா இருவருமே கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான தேர்வுகளாகத் தோன்றுகின்றனர். வழக்கமான உள்ளூர் தாதா போல நடிகர் ராமச்சந்திர ராஜு இரண்டு சண்டைக் காட்சிகளில் தோன்றி செல்கிறார். நகைச்சுவை நடிகர் அலி மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் ஒன்று, இரண்டு காட்சிகளில் மட்டும் சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர். சமர்ஜித்தின் காதலியாக வரும் நயன் சரிகா கதையை முன்னெடுத்து செல்வார் என எதிர்பார்த்தால், கதை அவரை ஓரமாக நகர்த்தி வைத்து தொடர்ந்து செல்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆன்டனி சாம்சன், மன்னர் காலகட்டம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு விதமான காலகட்டங்களுக்கும் உரிய ஒளிப்பதிவை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார். குறிப்பாக மன்னர் காலகட்ட காட்சிகளில் விஎப்எக்ஸ் குழுவும் அவரது வேகத்திற்கும் காட்சியமைப்பிற்கும் ஈடு கொடுத்து சிறப்பாக ஒத்துழைத்துள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வழக்கம்போல் பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியில் இடம்பெறும் யாகம் வளர்க்கும் காட்சியில் அவரது இசை பரபரப்பையும் திகிலையும் ஒருசேர உருவாக்குகிறது.
மறு ஜென்மக் கதைகள் எப்போதுமே பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துபவை. அவற்றை நிகழ்காலத்துடன் எந்த விதத்தில் இணைக்கிறார்கள் என்பதில்தான் அந்தக் கதையின் வெற்றியும் அடங்கி இருக்கிறது. இந்த படத்தில் மன்னர் காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை இயக்குநர் கவுரி நந்தா தெளிவாக எடுத்துரைத்திருந்தாலும், அதையே நிகழ்காலத்தில் பொருத்தி அதற்கான தீர்வை சொல்லும் இடத்தில் சிறிது குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. தந்தை மற்றும் மகனுக்கிடையிலான ஒரு சிறிய ஈகோவின் காரணமாக தாயின் உயிர் பிரிவது எதிர்பாராத திருப்பமாக இருந்தாலும், மறு ஜென்மக் கதைக்கு அடித்தளமாக இருந்த அந்த தாயின் கதாபாத்திரத்திற்கு நிகழ்கால காட்சிகளில் போதிய முக்கியத்துவம் அளிக்காததும், கிளைமாக்ஸ் உடன் அவரை சரியாக இணைக்காமல் விட்டதும் படத்திற்கு ஒரு மைனஸ் அம்சமாக பார்க்கப்படுகிறது.
