‘Dear Radhi’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

ஐடியில் பணிபுரியும் சரவண விக்ரம் (சரவண விக்ரம்) பெண்களைப் பார்த்தால் கூச்சமும் பழகும் பயமும் கொண்டவர். இரண்டு காதல் தோல்விகளுக்குப் பிறகு, அந்த குணத்தை மாற்ற நண்பன் அவரை ஒரு பலான பார்லருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு ஹஸ்லி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, ஒருநாள் ஜாலியாகச் சுற்றும் ஒப்பந்தம் உருவாகிறது. பணம் கொடுத்து சம்மதிக்கும் ஹஸ்லியுடன் பைக்கில் சுற்றும்போது, வில்லன் ராஜேஷ் டீம் மற்றும் போலீஸ்காரர் சரவணன் பழனிசாமி அவர்களைத் துரத்துகிறார்கள். இதன் பின்னணி என்ன, இறுதியில் என்ன நடக்கிறது என்பதே ‘டியர் ரதி’ கதைக்களம்.

டார்க் காமெடி ஜானரில், லேசான அடல்ட் கன்டென்ட் கலந்து, புதிய விதமான திரைக்கதையில் படத்தை இயக்கியுள்ளார் பிரவீன் கே மணி. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கண்ணனாக நடித்த சரவண விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக மலையாள படங்களில் நடித்த ஹஸ்லி, வில்லனாக ராஜேஷ் பாலசந்திரன் நடித்துள்ளனர். இவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. இது காதல் கதையுமல்ல, காமக் கதையுமல்ல; முழுக்க எக்ஸ்பரிமென்டல் சப்ஜெக்ட். குறும்புத்தனமான நடிப்பு, அப்பாவி கேள்விகள், வித்தியாசமான ஆசைகள் ஆகியவற்றுடன் சரவண விக்ரம் ஓரளவு நன்றாக நடித்துள்ளார். 2K கிட்ஸ்க்கு பிடிக்கும் வகையில் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹஸ்லி–சரவண விக்ரம் இடையிலான சீன்கள், டயலாக்கள், பயணம் படத்திற்கு யூத் டச் சேர்க்கின்றன. ஆபாசம் இல்லாமல் ஹஸ்லி கேரக்டரை காட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

வில்லனாக வரும் ராஜேஷ் பாலசந்திரன் நடிப்பில் பாடி லாங்குவேஜ், கோபம், ஆக்ஷன் ஆகியவை படத்திற்கு பிளஸ்; சில இடங்களில் ஓவர் ஆக்டிங். துணை கதாபாத்திரங்களும் தங்களுக்கான பங்களிப்பை செய்துள்ளனர். போலீஸாக வரும் சரவணன் பழனிசாமி நடிப்பு ஓகே என்றாலும் சில டயலாக்கள் அதிகமாக தெரிகின்றன.

டார்க் காமெடி ஜானரை ரசிக்காதவர்களுக்கு சில சீன்கள், டயலாக்கள் புரிதலில் சிரமம் தரலாம். குழப்பமான திரைக்கதை, தொடர்ச்சியான உரையாடல்கள், தேவையற்ற தகவல்கள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன. சில கேரக்டர் என்ட்ரிகள் புதுமையாக இருந்தாலும், வில்லன் டீம் சேசிங் மற்றும் ஹீரோயின் கேரக்டர் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு சில சேசிங் காட்சிகளை அழகாக காட்டுகிறது. ஜோன்ஸ் ரூபர்ட் இசை சராசரி. படம் தொடங்கிய பின்பும் ‘என்ன சொல்ல வருகிறார்கள், அடுத்து என்ன?’ என்ற குழப்பம் தொடர்கிறது.

Add a Comment

Leave a Reply