பாட்டி ஜரினா வஹாப் நினைவிழிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆறுதலாக பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய் தத்தைத் தேடி ஹீரோ பிரபாஸ் பயணிக்கிறார். அந்த தேடலின் போது, ஒரு பாழடைந்த பழமையான பங்களாவில் ஹீரோயின்கள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் சிலருடன் அவர் சிக்கிக் கொள்கிறார். அந்த பங்களாவில் தோன்றும் சஞ்சய் தத் ஆவி இவர்களை அச்சுறுத்துகிறது. உண்மையில் சஞ்சய் தத் யார்? அவர் ஏன் ஆவியாக அனைவரையும் துன்புறுத்துகிறார்? அந்த பங்களாவிலிருந்து பிரபாஸ் மற்றும் அவரது குழு வெளியே வர முடிந்ததா என்பதைக் ஹாரர், பேண்டசி, காதல், காமெடி ஆகியவை கலந்த வகையில் சொல்கிறது ‘தி ராஜா சாப்’. தெலுங்கு மொழியில் உருவான இப்படம், தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

சிறிது நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில், பாட்டியின் அரவணைப்பில் அன்புடன் வளர்ந்தவராக பிரபாஸ் தோன்றுகிறார். அவரது அறிமுகக் காட்சி, கலர்புல் ஓபனிங் பாடல் ஆகியவை மாஸ் உணர்வை ஏற்படுத்துகின்றன. நினைவழிப்பு நோயால் அவதிப்படும் பாட்டியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. தாத்தாவைத் தேடி நகரத்துக்கு வரும்போது நிதி அகர்வால் மீது காதல் மலர்கிறது. அந்த காட்சிகளில் பெரிய ஈர்ப்பு இல்லாவிட்டாலும், பிரபாஸ் – நிதி அகர்வால் பாடல் காட்சிகள் மற்றும் மூன்று ஹீரோயின்களுடன் பிரபாஸ் ஆடும் பாடல் காட்சி பார்ப்பதற்கு அழகாக அமைந்துள்ளது.
ஒரு பாழடைந்த, பிரம்மாண்டமான பங்களாவில் சிக்கி பேய் பிடியில் தவிக்கும் காட்சிகள்தான் படத்தின் முக்கிய பலம். எந்த அறைக்குச் சென்றாலும் பேய் பயமுறுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரபாஸுடன் விடிவி கணேஷ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோரும் அந்த பங்களாவில் சிக்கி, பேயைக் கண்டு அலறி திணறுகிறார்கள்.
மொத்தத்தில், பல காட்சிகளிலும் கதாபாத்திரங்களிலும் சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை’ படத்தின் நினைவுகளை இது ஏற்படுத்துகிறது. ஆனால் ‘அரண்மனை’ அளவிற்கு பேய் சம்பந்தப்பட்ட அம்சங்களும், பிளாஷ்பேக் வலிமையும், காமெடியும் இல்லை என்பதே உண்மை. சமுத்திரகனி சில காட்சிகளில் வந்து செல்கிறார். விடிவி கணேஷ் காமெடி என்ற பெயரில் சோதிப்பதாகவே தெரிகிறது. ஹீரோயின்களில் நிதி அகர்வாலின் ரொமான்ஸ் சராசரி மட்டமே. மாளவிகா மோகனன் பாடல் காட்சிகளில் மட்டும் ஓகே ரகம். இன்னொரு ஹீரோயின் ரித்திக்கு பெரிதான வாய்ப்பு இல்லை.
பிரபாஸ், அவரது பாட்டி ஜரினா வஹாப், தாத்தா சஞ்சய் தத் ஆகிய மூவரைச் சுற்றியே கதையின் பெரும்பகுதி நகர்கிறது. பாடல், காமெடி, ஆக்ஷன் காட்சிகளில் பிரபாஸ் தன் திறமையை காட்டினாலும், சென்டிமென்ட் காட்சிகள் அவருக்கு முழுமையாக செட் ஆகவில்லை. அவருக்கும் பாட்டிக்கும் இடையிலான பாசத்தை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம். பாட்டியாக வரும் ஜரினா வஹாப், நினைவழிப்பு நோயால் பாதிக்கப்பட்டவராகவும், பேரன் மற்றும் கணவர் மீது ஆழ்ந்த பாசம் கொண்டவராகவும் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரமும் நடிப்பும் படத்திற்கு முக்கிய பிளஸாக அமைந்துள்ளன. கிளைமாக்ஸில் அவரது கதாபாத்திரம் மாறும் விதம் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
சஞ்சய் தத் சில காட்சிகளில் கொடூரமானவராகவும், மந்திர–தந்திரங்கள் தெரிந்தவராகவும் வருகிறார். மீதமுள்ள காட்சிகளில் அவர் பேய் உருவத்தில் கிராபிக்ஸ் மூலம் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரையும் இயக்குநர் முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற உணர்வு உள்ளது. பாட்டி தொடர்பான பிளாஷ்பேக் காட்சி நன்றாக அமைந்துள்ளது. அதை விரைவாக முடித்துவிட்டு, ‘அரண்மனை’ பட கிளைமாக்ஸ் ஸ்டைலில் அம்மன் காட்சியை வைத்து பேயை கட்டுப்படுத்தும் வகையில் முடிவை கொண்டு செல்கிறார்கள்.
பிரபாஸுக்கு காமெடி பெரிய அளவில் வேலை செய்யவில்லை. கிளைமாக்ஸ் சண்டை காட்சி பரவாயில்லை என்ற அளவில்தான் உள்ளது. ஒரு மாஸ் ஹீரோவை இவ்வளவு சுமாராக பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் குறையாக தெரிகிறது. ஹீரோவுக்காக இரண்டு ஹீரோயின்கள் சண்டை போடுவது, முறைப்பது போன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்து சலித்த வகையைச் சேர்ந்தவை. சீரியஸாக இருக்க வேண்டிய பல காட்சிகள் நாடகத்தனமாக மாறுவதும் படத்தின் மைனஸாக அமைந்துள்ளது.
படத்தின் முக்கால்வாசி காட்சிகள் அந்த பிரம்மாண்டமான பங்களாவிலேயே நடைபெறுகின்றன. அந்த பங்களாவை இன்ச் பை இன்ச் ரசிக்க வைக்கும் வகையில், தத்ரூபமாகவும் அழகாகவும் செட் அமைத்துள்ளார் கலை இயக்குநர் ராஜீவன். ஒவ்வொரு இடத்திலும் அவரது உழைப்பு வெளிப்படையாக தெரிகிறது. பேய் படங்களுக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவில் கார்த்திக் பழனி மிரட்டியுள்ளார். பேய் தொடர்பான காட்சிகளில் கிராபிக்ஸ் குழுவின் உழைப்பும் தெரிகிறது. இருப்பினும், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற குறையும் உள்ளது. அதே நேரத்தில், தமன் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை பிரபாஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். மூன்று பாடல்களில் தமனின் தனித்துவமான டச் தெளிவாக உணரப்படுகிறது.
