தந்தையும் சகோதரனும் புரோகித சடங்குகளை செய்து வருவதால் முழுவதுமாக அதிலேயே பிஸியாக இருக்க, கதாநாயகன் நிவின் பாலி மட்டும் அந்த வழியில் அதிக ஆர்வம் காட்டாமல், தனக்கு பிடித்த கிடார் இசை கலைஞராக உருவாக வேண்டும் என்ற ஆசையுடன் பயணிக்கிறார். ஒரு இசைக்குழுவில் இணைந்து, அவ்வப்போது மேடைகளில் இசை வாசித்து வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில், இரண்டு மாதங்கள் வெளிநாடு செல்லவுள்ள அந்த இசைக்குழுவில் அவருக்கு விசா கிடைக்காததால் வேலை இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே உதவிக்கு அழைத்திருந்த தனது நண்பனும் புரோகிதருமான அஜூ வர்கீஸுடன் சேர்ந்து, பல்வேறு சடங்குகளில் உதவியாளராகச் செல்ல ஆரம்பிக்கிறார். சில காலங்களில், தனியாகவே புரோகித சடங்குகளை செய்யும் அளவிற்கு அவர் வளர்ச்சி அடைகிறார்.

அவ்வாறு ஒரு நாள், ஒரு வீட்டில் உள்ள சிறுவனுக்கு பேய் பிடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பெற்றோர் அழைக்க, அதற்கான சடங்குகளை செய்வதற்காக நிவின் பாலி அங்கு செல்கிறார். சடங்கு முடிவதற்குள் அந்த சிறுவன் குணமடைகிறான். ஆனால் அதே இரவு, நிவின் பாலியின் அறையில் இளம்பெண் ரியா ஷிபு திடீரென தோன்றுகிறார். அப்போது தான், அந்த சிறுவனை பிடித்திருந்த ஆவி தற்போது தனது வீட்டிற்கு வந்துவிட்டதை நிவின் பாலி உணர்கிறார். ஆரம்பத்தில் அவர் பயந்தாலும், அமைதியான குணம் கொண்ட ரியா ஷிபு, தான் அவரை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும், தனக்கு தான் யார் என்பதே தெரியாது என்றும் கூறுகிறார். காலப்போக்கில் இருவருக்கும் நட்பு மலர்கிறது.
ஒரு கட்டத்தில், நிவின் பாலிக்கு மும்பையில் கிடார் இசைப்பதற்கான ஒரு திரைப்பட வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக அவர் மும்பைக்கு செல்கிறார். அங்கு பணிபுரியும் ப்ரீத்தி முகுந்தனுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. இதை பார்த்து பொசசிவ் ஆகும் ரியா ஷிபு, நிவின் பாலியை காதலிப்பதாக வெளிப்படையாக சொல்கிறார். அதே சமயத்தில், ரியா ஷிபுவுக்கு தானே யார் என்பது பற்றிய உண்மை தெரிய வருகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கிளைமாக்ஸாக அமைகிறது. தனக்கு யார் என்று தெரியாத இளம்பெண் ஆவி, கதாநாயகனுடன் நட்பாக பழகும் கதைக்களம் ஏற்கனவே பல திரைப்படங்களில் வந்துள்ளது. குறிப்பாக நயன்தாரா அறிமுகமான காலகட்டத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘விஸ்மயதும்பத்து’ கதையை சற்றே மாற்றி அமைத்தது போல இதன் அடிப்படை கதை உருவாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிவின் பாலியை காமெடி கலந்த நடிப்பில் பார்க்கும்போது, அவர் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் ஏற்கனவே பலமுறை பார்த்து பழகிய கதையும், பலவீனமான திரைக்கதையும் அவரது இந்த முயற்சியை முழுமையாக பயனளிக்காமல் செய்துள்ளன. சீரியஸ் கதாபாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, வழக்கமான காமெடி கலந்த தனது ரூட்டிற்கு நிவின் பாலி திரும்பி வந்ததற்காக அவருக்கு ஒரு ‘சபாஷ்’ சொல்லலாம். இருப்பினும், கதைத் தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால்தான் அவர் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முடியும்.
கதாநாயகியாக ரியா ஷிபு, துறுதுறுப்பான ஜாலியான இளம்பெண்ணாக தனது கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். ஆவியாக இருந்தபடியே திடீரென யாரோ கதவைத் திறந்து கொண்டு வரும்போது பயப்படும் காட்சிகள் சரியான காமெடி தருணங்களாக அமைந்துள்ளன. மலையாள சினிமாவில் இனி இவரை அடிக்கடி பார்க்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் அளிக்கிறார். இன்னொரு நாயகியாக இடைவேளைக்குப் பிறகு வரும் ப்ரீத்தி முகுந்தன், காதல் தோல்வியுடன் அறிமுகமாகி உடனடியாக நிவின் பாலியுடன் காதலில் விழும் காட்சிகளின் மூலம், இன்றைய இளம் பெண்களின் மனநிலையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் அஜூ வர்கீஸை நீண்ட காலத்திற்கு பிறகு, அதுவும் காமெடி கதாபாத்திரத்தில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிவின் பாலி – அஜூ வர்கீஸ் கூட்டணி மீண்டும் கம்பேக் செய்துள்ளது என்று சொல்ல வைக்கும் வகையில் அவர்களின் காட்சிகள் அமைந்துள்ளன. நிவின் பாலியின் பெரியப்பாவாக வரும் ஜனார்த்தனன், ரியா ஷிபுவின் தந்தையாக சில காட்சிகளில் மட்டும் தோன்றி செல்லும் வினித், கொரியர் பையனாக வரும் அல்தாப் சலீம் உள்ளிட்டோர் தங்கள் குறுகிய தோற்றங்களிலேயே கவனம் ஈர்க்கிறார்கள். சரண் வேலாயுதனின் ஒளிப்பதிவு வழக்கமான சினிமா தேவைகளை நேர்த்தியாக நிறைவேற்றியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இரண்டு பாடல்கள் மெலடியான உணர்வுடன் கவர்கின்றன. இயக்குநர் அகில் சத்யன், இதை ஒரு ‘ஃபீல் குட்’ திரைப்படமாக வழங்க முயற்சி செய்துள்ளார்.
