‘தி பெட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்

சென்னையில் ஐடியில் வேலை செய்யும் ஸ்ரீகாந்த், பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகிய நால்வர் நண்பர்கள், கால் கேர்ளான சிருஷ்டி டாங்கேயை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்கும் அவர்கள் நினைத்தபடி விஷயங்கள் நடக்காமல் போக, திடீரென சிருஷ்டி காணாமல் போகிறார். அதே நேரத்தில் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து போலீஸ் அதிகாரி ஜான் விஜய் விசாரணை நடத்துகிறார். உண்மையில் சிருஷ்டிக்கு என்ன ஆனது, கொலையாளி யார் என்பதே ‘தி பெட்’ படத்தின் கதை. ஊட்டியில் உள்ள ரிசார்ட் அறையில் இருக்கும் ஒரு ‘பெட்’ கதை சொல்வது போல திரைக்கதை நகர்கிறது.

கவர்ச்சி அதிகம் நிறைந்த கதையென்றாலும், அதை ஓரளவு நாகரிகமாக காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். இப்படிப்பட்ட சப்ஜெக்ட்டில் ஸ்ரீகாந்த் நடிப்பது ஆச்சர்யமாக இருந்தாலும், நால்வர் நண்பர்களில் கொஞ்சம் நல்லவராக அவர் வருகிறார். மற்ற நண்பர்கள் சிருஷ்டியை வேறு பார்வையில் பார்க்க, ஸ்ரீகாந்த் மட்டும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை; ஆனால் கடைசி அரைமணி நேரத்தில் அவரது கேரக்டர் மற்றும் நடிப்பு எதிர்பாராத ட்விஸ்டாக அமைகிறது. குடும்பப் படங்களில் நடித்தவர் இத்தகைய சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் புரியாததாகவே உள்ளது.

படத்தின் முதல் பாதி முழுக்க சிருஷ்டியுடன் டூர், பேச்சு, ஜொள்ளு என செல்கிறது. இரண்டாம் பாதியில் போலீஸ் விசாரணை, சந்தேகம் என நகர்கிறது. ஆனால் அந்த இரண்டாம் பாதி பெரும்பாலும் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஊட்டியில் நாலு நண்பர்கள் அடிக்கும் லூட்டி, தவிப்பு ஆகியவை இளம் ஆண்களுக்கு ரசிக்கும்படி இருக்கலாம்; மற்றவர்களுக்கு முகம் சுளிக்க வைக்கும்.

சிருஷ்டி டாங்கே அவரது கதாபாத்திரத்தில் ஓவர் கவர்ச்சி இல்லாமல் நடித்துள்ளார். அழகாக தோன்றும் அவர், இடைவேளைக்குப் பிறகு காணாமல் போவது கதையின் முக்கிய புள்ளி. அதற்குப் பிறகு ஜான் விஜய் நடத்தும் விசாரணை, அவரது சேட்டைகள், குடும்ப வாழ்க்கை விஷயங்கள் எல்லாம் தேவைக்கு அதிகமாக தோன்றுகின்றன. தொடர்ந்து போலீஸ் கேரக்டர்களில் ஜான் விஜய் காட்டும் ஆர்வக்கோளாறு நடிப்பு சலிப்பை ஏற்படுத்துகிறது. போலீசாக வரும் தேவிப்ரியாவுக்கும் பெரிதாக வேலை இல்லை. ஜான் விஜயின் மனைவியாக வரும் ரிஷா சிறந்த நடிப்பு.

நாலு நண்பர்களில் பிளாக் பாண்டி தனது காமெடித்தனத்தால் கவனம் ஈர்க்கிறார். சிருஷ்டியின் அம்மாவாக வரும் திவ்யா, அந்த தொழிலை சாதாரண சேவையாகக் காட்டுவது சர்ச்சைக்குரியது. கூகுளில் தேடி அந்த சேவையை பெறுவது போல காட்டப்பட்டிருப்பதும் கேள்விக்குறி. மற்ற இரண்டு நண்பர்கள் நடிப்பு சராசரி. ஒளிப்பதிவாளர் கோகுல், சென்னையை விட ஊட்டி பகுதிகளை அழகாக காட்சிப்படுத்துகிறார். ஆனால் ஊட்டியை ரிசார்ட், ரூம், போலீஸ் விசாரணை என மட்டுப்படுத்தியது ஏமாற்றம். தாஜ்நூர் இசையில் புதுமை எதுவும் இல்லை.

ஐடியில் வேலை செய்யும் இளைஞர்கள் பணத்தை தவறாக பயன்படுத்தி உல்லாசம் அனுபவிக்கிறார்கள் என்ற ஒரே டோனில் படம் நகர்கிறது. கால் கேர்ள் விஷயத்தையும் மிக எளிதாக, சாதாரணமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். சிருஷ்டிக்கு என்ன ஆனது, கொலையாளி யார் என்பதே கதையில் புதுமை; அதுவும் அழுத்தமில்லாமல் சப்பென முடிகிறது. காதல் படமுமில்லை, முழுமையான காமப் படமுமில்லை, சரியான திரில்லரும் இல்லை. மொத்தத்தில், ஊட்டி டிரிப்பை தூக்கத்தில் கழித்த அனுபவம் போலவே ‘தி பெட்’ திரைப்படம் முடிகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading