‘மார்க்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

முதல்வராக பதவியில் இருக்கும் தனது தாயை மருத்துவமனையில் வைத்து கொலை செய்து, தானே அந்த பதவியை கைப்பற்ற முயலும் ஒரு வில்லன். பல குழந்தைகளை கடத்தி ரகசியமாக அடைத்து வைத்து, அவர்களது பெற்றோர்களை துன்பத்தில் ஆழ்த்தும் இன்னொரு வில்லன். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வேறொரு வில்லன். தனது தம்பியின் காதலை எதிர்த்து, அதற்காக பலரை கொன்று குவிக்கும் இன்னொரு வில்லன். இத்தகைய பல்வேறு குற்றவாளிகளையும் சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் எஸ்.பி.யான ஹீரோ கிச்சா சுதீப் எவ்வாறு எதிர்கொள்கிறார், பிரச்சனைகளை எப்படி சமாளித்து தீர்வு காண்கிறார் என்பதையே முழுக்க ஆக்ஷன் கலந்து சொல்லும் கதையாக ‘மார்க்’ உருவாகியுள்ளது. ஹீரோவின் பெயரே மார்க் என்பதாலேயே இப்படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் தயாரான இந்த படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.

லாஜிக் குறித்து அதிகமாக யோசிக்காமல் ரசிக்க வேண்டிய படம் என்பதை இயக்குனர் ஆரம்ப காட்சிகளிலேயே சொல்லிவிடுகிறார். போதையில், அதுவும் போலீஸ் ஸ்டேஷனிலேயே ரவுடிகளை அடித்து துவைக்கும் காட்சியுடன் கிச்சா சுதீப் அறிமுகமாகிறார். சஸ்பெண்டில் இருந்தாலும், டூட்டியில் இருப்பவர் போலவே செயல்படும் அவரது அணுகுமுறை காட்சிகளின் வழியே வெளிப்படுகிறது. ஏராளமான டிரான்ஸ்பர் மற்றும் சஸ்பென்ஷன்களை சந்தித்தவர் என்று அவரைப் பற்றி பெருமையாக பேசும் வசனங்கள், ஹீரோவின் கேரக்டரை தெளிவாக புரிய வைக்கின்றன. குழந்தை கடத்தல் சம்பவம் மற்றும் ஒரு முக்கிய ரகசியம் அடங்கிய செல்போனை தேடி, தனது விசுவாசமான போலீஸ் குழுவுடன் சுதீப் களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு தொடர்ச்சியான வில்லன்கள், நிறைய ஆக்ஷன் காட்சிகள், துப்பாக்கிச்சூடு, ரத்தம், கொலை என படம் வேகமாக நகர்கிறது.

சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி என்பதால் தாடியுடன், முரட்டுத்தனமான தோற்றத்தில், அடிக்கடி குடித்தபடியே ஆக்ஷனில் கலக்குகிறார் கிச்சா சுதீப். படத்தில் ஐந்து ஃபைட் மாஸ்டர்கள் பணியாற்றியிருப்பதால், ஒவ்வொரு சண்டைக் காட்சியும் போட்டி போட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பால சண்டை, ஓபனிங் ஃபைட் மற்றும் கிளைமாக்ஸ் ஃபைட் ஆகியவை குறிப்பாக கவனம் ஈர்க்கின்றன. விதிகளைப் பின்பற்றாத அதிகாரி என்ற கிச்சா சுதீப்பின் கேரக்டர் வித்தியாசமான கோணத்தில் அமைந்துள்ளது. இரண்டு பாடல்களில் நடனத்திலும் அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மேனரிசம் மற்றும் டயலாக் டெலிவரி தனிச்சிறப்பாக இருக்கிறது. மனைவி, காதல், காதலி போன்ற தேவையற்ற அம்சங்கள் இல்லாதது ஓரளவு ஆறுதலாக இருந்தாலும், வில்லன்கள் மட்டும் அளவுக்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சைக்கோ போல் கத்திக்கொண்டே பலரை அடித்து துன்புறுத்தி, விருப்பம்போல் கொலை செய்யும் நவீன் சந்திரா, தனது தம்பி விக்ராந்த் காதலியுடன் ஓடியதால் கொதிக்கும் கேரக்டரில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருக்கும் சுதீப்புக்கும் இடையிலான மோதல் காட்சிகள் திரைக்கதையில் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளன. ஜோக்கர் சோமசுந்தரம் காமெடி கலந்த வில்லனாகவும், ஷைன் டாம் சாக்கோ கொடூரமான அரசியல்வாதியாகவும் நடித்துள்ளனர். ஷைன் டாம் சாக்கோ தொடர்பான சில காட்சிகள் தமிழக அரசியலை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. இடையே குழந்தை மற்றும் குடும்பத்தை மையமாக கொண்ட சென்டிமென்ட் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆக்ஷன் காட்சிகளை நேர்த்தியாகவும் ரசிக்கும்படியும் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா படமாக்கியுள்ளார். அவரது கேமரா ஆங்கிள்களும், சண்டைகள் நடைபெறும் லொக்கேஷன்களும் கண் கவரும் வகையில் அமைந்துள்ளன. காந்தாரா புகழ் அஜ்னீஷ் இசை படத்தின் வேகத்தை அதிகரித்து, ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் தாக்கத்தை அளிக்கிறது. ஆனால் குழப்பமான திரைக்கதை மற்றும் சரியாக பொருந்தாத தமிழ் டப்பிங் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது. சஸ்பெண்டில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி தனியாக இவ்வளவு பெரிய விஷயங்களை செய்து முடிக்க முடியுமா என்ற லாஜிக் மீறலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தின் பலவீனமாக தெரிகின்றன. பல ஹிட் படங்களின் காட்சிகளை ஒன்றாக கலந்தது போல் ‘மார்க்’ தோற்றமளிக்கிறது. சுதீப்பின் அணியில் போலீசாக வரும் ரோஷினி பிரகாஷ் மற்றும் தீப்ஷிகா ஆகியோரின் நடிப்பும், சண்டைக் காட்சிகளும் ஓரளவு ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில், இது அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு ஆக்ஷன் பேக்கேஜ் படமாக அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading