‘வா வாத்தியார்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

நடிகர் கார்த்தியின் தாத்தாவாக படத்தில் இடம்பெறும் ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக சித்தரிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி ராஜ்கிரணுக்கு கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வரும்போதே, அவருக்கு பேரனாக கார்த்தி பிறக்கிறார். பேரன் பிறந்த சந்தோஷத்தில், “இவன்தான் அடுத்த எம்.ஜி.ஆர்” என்ற ஆழமான நம்பிக்கையுடன், கார்த்தி நேர்மையான மனிதனாக வளர வேண்டும் என்ற கனவோடு ராஜ்கிரண் அவரை வளர்க்க நினைக்கிறார். ஆரம்ப காலங்களில் கார்த்தியும் எம்.ஜி.ஆரைப் போல நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்ந்து வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில், நம்பியார் கதாபாத்திரத்தின் தாக்கத்தால் தவறான செயல்களில் ஈடுபட்டு, போலீசாக மாறும் பாதைக்கு செல்கிறார்.

இந்த சூழ்நிலையில், “மஞ்சள்முகம்” என்ற பெயரில் செயல்படும் ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. அந்த கும்பலை பிடித்தால் பெரிய தொகை கிடைக்கும் என்ற எண்ணத்தில், கார்த்தி அவர்களை பிடிக்க முயற்சிக்கிறார். இதற்கிடையில், கார்த்தியின் உண்மையான முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வர, அதன் பிறகு நிகழும் சம்பவங்களே படத்தின் மீதமுள்ள கதையாக நகர்கிறது.

படத்தில் நாயகனாக நடித்துள்ள கார்த்தி, தனது நடிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட கதாபாத்திரங்களில் அவர் மேலும் திறம்பட செயல்படுகிறார். நம்பியார் இன்ஸ்பிரேஷனில் அவர் மேற்கொள்ளும் செயல்கள் கலகலப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்க, பின்னர் எம்.ஜி.ஆர் போல மாறும் காட்சிகளில் அவரது மேனரிசங்கள் கவனம் ஈர்க்கின்றன. படத்தின் முதல் பாதி, கார்த்தி தனது தாத்தாவுக்கு தெரியாமல் பல முறைகேடான வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பதை மையமாக கொண்டு நகர்கிறது. அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்த பிறகு ராஜ்கிரண் இறப்பதும், அதன் பின்னர் “எம்.ஜி.ஆர் மீண்டும் வருகிறார்” என்ற கான்செப்ட் உருவாகுவதும், படத்திற்கு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.

கார்த்தியை தவிர, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்து முடித்துள்ளனர். கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லாதது ஒரு குறையாக தெரிகிறது. அதேபோல், சத்யராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோருக்கும் வலுவான கதாபாத்திரங்கள் வழங்கப்படவில்லை. நலன் குமாரசாமி இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் ஒன்-லைனர் காமெடி இந்த படத்தில் குறைவாகவே உள்ளது. அந்தக் காமெடியும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர் தோன்றி கார்த்தியின் தவறுகளை சுட்டிக்காட்டும் காட்சிகள் மட்டுமே ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளன.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது போல திரைக்கதை அமைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்வையாளர்கள் முன்கூட்டியே கணிக்க முடிவது படத்தின் பலவீனமாக தெரிகிறது. தொழில்நுட்ப அம்சங்களைப் பொருத்தவரை, ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, 60-களின் இசை உணர்வை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் வழங்கியுள்ளது. எம்.ஜி.ஆர் பாடல்களின் ரீமிக்ஸ் பதிப்புகளும் அவரின் பங்கிற்கு சிறப்பாக அமைந்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading