சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல் நடிக்கும் ‘லவ் அன்ட் வார்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. நேற்று ரன்பீர் கபூரின் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது ஆலியா பட்டின் அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரன்பீர் கபூரின் திரைப்பயணம் 2007-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ‘சாவரியா’ படத்தின் மூலம் தொடங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே இயக்குநருடன் ‘லவ் அன்ட் வார்’ படத்தில் அவர் மீண்டும் இணைந்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் ஏற்கனவே ‘கங்குபாய் கதியாவாடி’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்காக ஆலியா பட் தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது வெளியாகியுள்ள ‘லவ் அன்ட் வார்’ போஸ்டர்களில் ஆலியா பட் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால், மூன்று முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
சஞ்சய் லீலா பன்சாலியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பன்சாலி புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை அவரே தயாரிக்கிறார். ‘லவ் அன்ட் வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அனிமல்’ படத்திற்குப் பிறகு ரன்பீர் கபூர் நடிக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
