தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்e, தங்களது இளமை மற்றும் நடுத்தர வயது காலகட்டங்களில் தமிழைத் தாண்டி பிற மொழிகளிலும் நடித்துத் தனித்துவமான புகழைப் பெற்றவர்கள். குறிப்பாக, அந்த காலத்தில் உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்த ஹிந்தி திரைப்படங்களில் அவர்கள் நடித்தது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. ஒரு கட்டத்திற்கு பின்னர், பிற மொழித் திரைப்படங்களில் இருந்து விலகி, தமிழ்த் திரையுலகத்திலேயே முழுமையாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அவர்களுக்குப் பிறகு வந்த சில நடிகர்கள் ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பெற்ற அளவிலான பிரபலத்தை அடைய முடியவில்லை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் தனுஷ் மட்டுமே ஹிந்தி திரையுலகத்திற்குச் சென்று குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் கடந்து சாதனை படைத்தது. அதேபோல், தெலுங்கில் ‘குபேரா’ படத்தில் நடித்ததன் மூலம் அங்கும் 100 கோடி வசூலை கடந்துள்ளார்.
‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘பான் இந்தியா’ பிரபலம் என்ற சொல் சினிமா உலகில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தங்களது தாய்மொழியைத் தாண்டி பிற மொழிகளிலும் வெற்றி பெற்று பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் நடிகர்களிடையே உருவாகியுள்ளது. அந்த வகையில், தெலுங்கு திரையுலகில் பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரும், கன்னட திரையுலகில் யஷ், ரிஷப் ஷெட்டி ஆகியோரும் பான் இந்தியா அளவில் கவனம் பெற்றுள்ளனர்.
ஆனால், தமிழ் சினிமாவைச் சேர்ந்த விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள், 2025ம் ஆண்டிலும் அந்த அளவிலான பான் இந்தியா பிரபலத்தை எட்ட முடியாமல் உள்ளனர். தனுஷ் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தனித்தனியாக 100 கோடி வசூலைப் பெற்றுள்ளார். தற்போதைய சூழலில், தமிழைத் தாண்டி பிற மொழிகளில் அதிக அளவில் பிரபலமாக இருப்பவர் என தனுஷ் முன்னணியில் உள்ளவராக கருதப்படுகிறார்.
