நாளை (டிசம்பர் 27) மலேசியாவில் நடைபெற உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்காக நடிகர் விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் ரிகர்சல்களை கவனிப்பதற்காக சில தினங்களுக்கு முன்பே ஒரு குழு மலேசியா சென்றடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் நடைபெற உள்ள இந்த ‘ஜனநாயகன்’ பாடல் வெளியீட்டு விழா, விஜய் நடிக்கும் கடைசி படத்தின் பாடல் வெளியீடு என்பதால் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இது விஜய் தொடர்பான கடைசி சினிமா நிகழ்ச்சியாகவும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த விழாவில் அவர் என்ன பேசப்போகிறார் என்பதில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
தற்போது தளபதி விஜய், இயக்குனர் ஹெச் வினோத், அனிருத் மற்றும் அட்லி, நெல்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் மலேசியா சென்றுள்ளனர். இதனுடன் தவெக கட்சியின் மூத்த நிர்வாகிகளும் மலேசியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவை நடிகர் ரியோ ராஜ் மற்றும் ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்க உள்ளதாகவும், நாயகி பூஜா ஹெக்டே நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
