வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை குற்றவாளி அக்ஷய்யை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, போலீஸ் ஏட்டையாக பணியாற்றும் விக்ரம்பிரபு அவரை பஸ்சில் அழைத்து செல்கிறார். அந்தப் பயணத்தின் போது நிகழும் சம்பவங்கள் என்ன, அக்ஷய் யாரை கொலை செய்தார், அவருக்கு விடுதலை பெற்றுத் தர விக்ரம்பிரபு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடைந்ததா, அக்ஷய் மற்றும் அவரது காதலி அனிஷ்மா மீண்டும் ஒன்றாக சேர்ந்தார்களா என்பதையே ‘சிறை’ திரைப்படத்தின் மையக் கதையாக அமைத்துள்ளனர். சுரேஷ் ராஜகுமாரி இந்த படத்தை இயக்கியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த கதை, 1990களில் நடைபெறுவதாக காட்டப்படுகிறது.

கைதி, போலீஸ், சிறை, நீதிமன்றம், காதல் ஆகிய பின்னணியில் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், தொடக்கக் காட்சிகளிலேயே இது வழக்கமான படம் அல்ல என்பதை இயக்குனர் உணர்த்துகிறார். மற்றொரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செல்லும் போது ஏற்படும் சண்டையில் விக்ரம்பிரபு செய்யும் செயல்பாடு, ‘இது புதுமையாக இருக்கிறதே’ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பார்வையாளர்களை படத்துடன் கட்டிப்போடுகிறது. இதற்கு முன் சில படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஆயுதப்படை போலீசாக வந்து, தனது இயல்பான, நுணுக்கமான நடிப்பால் கதைக்கு உயிரூட்டியுள்ளார் விக்ரம்பிரபு.
மனைவியுடன் ஏற்படும் மனஸ்தாபம், நண்பனுக்காக அதிகாரிகளிடம் வாதாடுவது, கொலை குற்றவாளியான அக்ஷய்யை கையாளும் விதம், குறிப்பாக விசாரணை கமிஷன் மற்றும் நீதிமன்ற காட்சிகளில் அவர் நடந்து கொள்வது என பல இடங்களில் விக்ரம்பிரபு தனது நடிப்பால் முத்திரை பதிக்கிறார். பல காட்சிகள் போலீஸ் கதைகளில் புதிய கோணங்களை சொல்லுகின்றன. கிளைமாக்சில் அக்ஷய்க்காக அவர் செய்யும் செயல்களும், போலீஸ் கடமை குறித்து பேசும் காட்சியும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த படத்தை பார்க்கும் போலீசாரும், அவர்களின் குடும்பத்தினரும் விக்ரம்பிரபுவை பாராட்டுவது உறுதி; இப்படிப்பட்ட போலீஸ் ஒருவர் இருந்தால் நல்லது என பொதுமக்களும் நினைப்பார்கள்.
ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் கதாபாத்திரத்தில் அக்ஷய் நடித்துள்ளார். அவரது தோற்றம், வசன உச்சரிப்பு, போலீசிடம் கெஞ்சும் காட்சிகள், காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்கள் அனைத்தையும் இயக்குனர் உணர்ச்சிப்பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளார். அக்ஷயின் நடிப்பும் கதாபாத்திரத்திற்கு முழுமையாக பொருந்துகிறது. கிளைமாக்சில் காதலிக்காக அவர் துடிக்கும் காட்சியும், நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசும் காட்சியும் சிறப்பாக அமைந்துள்ளன. 1987 காலகட்டத்தைச் சேர்ந்த சிவகங்கை பெண்ணாக புதுமுக நடிகை அனிஷ்மா கவனம் ஈர்க்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், காதலுக்காக அவள் அனுபவிக்கும் வேதனையும் தவிப்பும் பார்வையாளர்களை தொட்டுச் செல்கிறது. விக்ரம்பிரபுவின் மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா குறைந்த காட்சிகளில் தோன்றினாலும், அவரது முகபாவனைகளும் வசனங்களும் அழகாக அமைந்துள்ளன.
இவர்களைத் தவிர, ஒரு முக்கிய காட்சியில் மூணாறு ரமேஷ் பலரையும் உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கிறார். நீதிபதியாக நடித்த தேனப்பனும் மனதில் நிலைத்து நிற்கிறார். ஹீரோவின் தாய், ஹீரோயின் அக்கா, விக்ரம்பிரபுவின் போலீஸ் நண்பர்கள், மற்றொரு நீதிபதி என பல துணை கதாபாத்திரங்கள் கூட கதையின் ஓட்டத்தில் முக்கியத்துவம் பெற்று, நினைவில் பதியும் வகையில் நடித்துள்ளனர். ஹீரோயின் அக்காவின் கணவராக வரும் ரகுவின் நடிப்பும், அவரது செயல்களும் வில்லத்தனத்தின் உச்சமாக அமைந்துள்ளன.
அந்த காலகட்ட வேலூர் பஸ்ஸ்டாண்ட், சிவகங்கை நீதிமன்றம், போலீஸ் நிலையம், சிவகங்கை கிராமம் ஆகிய இடங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மாதேஷ்மாணிக்கம். ‘மன்னிச்சிரு’, ‘நீலோத்தி’ பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் படம் முழுவதும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி, படத்தை இன்னொரு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பிலோமின் எடிட்டிங் படத்திற்கு கச்சிதமாக அமைந்துள்ளது.
ஆயுதப்படை போலீஸ் நடைமுறைகள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது நிகழும் அனுபவங்கள், கீழ்நீதிமன்ற விதிமுறைகள், விசாரணை கைதிகளின் நிலை, ஒரே பெயரால் உருவாகும் சந்தேகங்கள் என பல புதிய விஷயங்களை கதையின் ஊடாக படம் சொல்லுகிறது. சிவகங்கையில் நடைபெறும் ஹீரோ–ஹீரோயின் காதலும், அதனைத் தொடர்ந்து வரும் பிரச்னைகளும் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. வழக்கமான காமெடி, குத்துப் பாடல்கள், செயற்கையான ஹீரோயிசம் இல்லாதது படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. பஸ் மற்றும் நீதிமன்றத்தை சார்ந்த காட்சிகள் மிகுந்த எதார்த்தத்துடனும் வேகத்துடனும் அமைந்துள்ளன.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாலேயே ‘சிறை’ திரைப்படத்தின் திரைக்கதையில் உயிர் உள்ளது. போலீஸ்துறையிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் பல பிரச்னைகள் உள்ளன, போலீசார் இப்படியாக நடந்தால் சமூகம் நல்லதாக்கும் என்பதைக் காட்சிகளின் வழியாக வலியுறுத்தியுள்ளது படம். எளிய மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், நீதிபதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அழுத்தமாக காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. கதை, திரைக்கதை, நடிப்பு மற்றும் சொல்லும் கருத்து என அனைத்து அம்சங்களிலும் நிறைவாக அமைந்த திரைப்படமாக ‘சிறை’ திகழ்கிறது.
