மலையாள சினிமாவில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் புகழ்பெற்று நடித்துவரும் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா, ஒரு சமீபத்திய பேட்டியில் தான் தவறவிட்ட மணிரத்னம் பட வாய்ப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, “மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘குட்டி ஸ்ராங்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதில் என் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் மணிரத்னத்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். அதனால் அவர் இயக்கவிருந்த ‘கடல்’ படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்க நினைத்தார். உடனே அவரை நேரில் சென்று சந்தித்தேன். எனை பார்த்தவுடன், ‘நான் எதிர்பார்த்தவர் நீங்களா?’ என்று கேட்டார். நானும் ‘நீங்கள் எதிர்பார்த்தவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘குட்டி ஸ்ராங்’ படத்தில் நடித்தவர்’ என்று கூற, ‘அவரே நான்தான், சார்’ என்று சொன்னேன். அப்போது தான் அவர் நம்பினார்.
அவர் என்னிடம், ‘இந்த படத்தில் உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும், நேரம் வந்ததும் அழைப்பேன்’ என்று கூறினார். ஆனால் மூன்று மாதங்கள் கழிந்தும் படம் தொடங்கவில்லை. பிறகு தான் அவர் கதையை மாற்றி, என் கதாபாத்திரம் தேவையில்லை என்று முடிவு செய்ததை அறிந்தேன். அந்த வாய்ப்பு நழுவி போனதற்கான வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது” எனத் தெரிவித்தார். சுரேஷ் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் ரோஜா நடித்த 100வது படம் ‘பொட்டு அம்மன்’ எனும் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

