Tuesday, September 17, 2024

சினிமா வரலாறு-80 – ‘சொன்னது நீதானா’ பாடல் பிறந்த கதை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காலை ஏழு மணி முதல் ஸ்ரீதரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாடல் கம்போசிங்கிற்காக காத்திருக்க பத்து மணிக்கு அங்கே வந்த கவிஞர் கண்ணதாசன் “நான் கம்போசிங்கிற்கு தயார். நீங்கள் தயாரா?” என்று கேட்டவுடன் லேசாக எரிச்சலடைந்த ஸ்ரீதர் “நாங்க ஏழு மணியிலே இருந்து இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கோம். காலையிலே சீக்கிரமே இந்த பாட்டை முடிக்கணும்னு நேற்றே உங்ககிட்ட சொன்னேன் இல்லே. அப்படியும் இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?” என்று  கேட்க, “கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுதான் லேட்டாகிவிட்டது” என்றார் கவிஞர்.

“எனக்கு எல்லாம் தெரியும். நேற்று  இரவு இரண்டு மணிவரைக்கும்  நீங்க தூங்கவேயில்லையாம்.  .அப்புறம் எப்படி ஏழு மணிக்கு உங்களால  வர முடியும்?” என்று ஸ்ரீதர் சொல்லிக் கொண்டே போக கண்ணதாசன், விஸ்வநாதன் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தார். கண்ணதாசனின் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாத  எம்.எஸ்.விஸ்வநாதன்  தலையைக் குனிந்து கொண்டார்.

சிறிது நேரத்திலே கம்போசிங் தொடங்கியது. ஸ்ரீதர் பாடல் எழுதப்பட்ட வேண்டிய காட்சியை விளக்க,  “நீங்க  முதல்ல பாட்டை எழுதி விடுங்கள். நீங்கள் எழுதுகின்ற  பாடலுக்கு நான்  இசையமைக்கிறேன்..” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். 

“பரவாயில்லை… நீ மெட்டைச்  சொல்லு..” என்று  கண்ணதாசன் சொல்ல  “ல ல ல லா லா லா …” என்று விஸ்வநாதன் மெட்டைப் பாடிக் காட்டினார். அடுத்த நிமிடம் பாடலை சொல்லத் தொடங்கிய கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை. விஸ்வநாதனைப் பார்த்து தான் கேட்க நினைத்த  கேள்வியையும் அந்தப் பாடலின் வழியே கேட்டார்.

“சொன்னது நீ தானா ?…..”

கண்ணதாசனின் அந்த  வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன்  முகம் லேசாக மாறியது. கவியரசர் இன்று பாட்டால் தன்னை அடிக்கப் போகிறார் என்று புரிந்து கொண்ட அவர் அடுத்து “ல ல ல” என்று சொல்ல ஒரு கணம்கூட தாமதிக்காமல் “சொல் … சொல்.. சொல்…” என்றார் கண்ணதாசன்.

அத்துடன் நிற்காமல், “சம்மதம்தானா?  ஏன் ஏன் ஏன் என்னுயிரே… இன்னொரு கைகளிலே, யார், யார், யார்.. நானா? என்னை மறந்தாயா..? ஏன் ஏன் ஏன் என்னுயிரே…?” என்று  கண்ணதாசன் பல்லவியைச்  சொல்லி   முடித்தபோது விஸ்வநாதன் முழித்ததைப்  பார்த்த ஸ்ரீதர் குலுங்கி, குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் மற்ற மற்ற சரணங்களையும் மடை திறந்த வெள்ளம் போல கண்ணதாசன் சொல்ல அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த  பாடல் கம்போசிங் முடிவடைந்தது.

ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ பாடலுக்குப் பின்னேயும் இது போன்ற ஒரு சுவையான சம்பவம் உண்டு.

‘காதலிக்க நேரமில்லை’ பாடல் கம்போசிங்கிற்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும்  அமர்ந்திருந்தபோது செய்தித் தாளில் அமெரிக்க அதிபர் ஐசனோவர் பற்றி வந்திருந்த செய்தியை அங்கிருந்த ஒருவர் உரக்கப் படிக்க, விஸ்வநாதன் உடனே “ஐசனோவர் யார் அண்ணே..?” என்று கண்ணதாசனைக் கேட்டார்.

எம்.எஸ்.வி.க்கு இசையைத் தவிர வேறு எதிலும் மிகப் பெரிய ஞானம்  கிடையாது என்பதை நன்கு அறிந்திருந்த  கண்ணதாசன் “அடே மண்டு.. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்..” என்றார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி காட்சி  என்னன்னா, தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துகிறார். அந்த காட்சிக்குத்தான் இப்ப கம்போசிங். நீங்க டியூன் போட்டுக்கிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம்  டிஸ்கஷன் வேலை பாக்கி இருக்கு. அதை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு சி.வி.ராஜேந்திரனோடும், கதாசிரியர் கோபுவோடும் கதை பேச போய்விட்டார்.

சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயர் விஸ்வநாதனின் மனதில் சுற்றிக் கொண்டே இருந்ததால்  “ஐசனோவர்…. ஆவலோவா….” என்று வாய்விட்டு  சத்தம் போட்டு அவர் டியூனை பாடத் தொடங்கினார்.

உடனே  உள் அறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க பாடினீங்களே,  அந்த  ட்யூன் ரொம்ப நல்லா இருக்கு. அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்…” என்றார்.

ஸ்ரீதருக்கு டியூன் பிடித்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்த விஸ்வநாதன் “அண்ணே சீக்கிரம் இந்த டியூனுக்கு பாட்டை சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு இன்னொரு  கம்பெனியின்  கம்போசிங்கிற்கு   நான் போகணும்..” என்றார்.

“இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையெல்லாம் செலவழிச்சிட்டேன். அதனால இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு, மூணு பாட்டு எழுதிக் கொடுத்திட்டு  அவர்கிட்ட மொத்தமா காசை வாங்கிகிட்டு போகணும் அப்படீங்கிற முடிவோடு நான் வந்திருக்கேன்.  அதனால நீ என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா.  இன்னிக்கு எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா….!” என்றார்.

கவிஞர் அப்படிச்  சொன்னதும் மீண்டும் டிஸ்கஷன் அறையிலே இருந்து  தலையை  வெளியே நீட்டிய ஸ்ரீதர் “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே ‘வேலை கொடுடா விஸ்வநாதா’… என்று அதையே  பல்லவியா வைச்சிக்கலாம்” என்றார்.

அவர் அப்படிச்  சொன்னவுடன் விஸ்வநாதன்  கண்ணதாசனைப் பார்த்து  “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு….? நான் வாய்க்கு வந்தபடி ‘ஐசனோவர் ஆவலோவா’னு பாடினேன்  ‘அதுதான் ட்யூன்’ அப்படின்னார். இப்ப  ‘வேலை கொடுடா விஸ்வநாதா’ன்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டார்.

“இதோ பார் விசு. நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஏதோ ஒரு  டெஸ்ட் வச்சிருக்கார்னு நினைக்கிறேன். அதை சாதிச்சுக் காட்டி நாம்ப பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன்.. நான் சொன்னதுதான் பல்லவி… ஆரம்பி” என்றார்.

“ஐசனோவர்…. ஆவலோவா…. என்ற மெட்டுக்கு  “வேலை கொடு விஸ்வநாதா” என்று கண்ணதாசன் சொன்னபோது  “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர்.  தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர். அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா. வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக் குறைவா இருக்குதே அண்ணே” என்று விஸ்வநாதன்  சொல்ல, “சரி, அப்படீன்னா இப்படி வைச்சிக்க… வேலை கொடு விஸ்வநாதா” என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்’ என்று போட்டுக் கொள்”  என்று சொல்லிவிட்டு  மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார் கண்ணதாசன். அப்படி உருவான பாடல்தான் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ என்ற பாடல்.

கே.பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்திலே இடம் பெற்ற ‘சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி’ என்ற பாடல் மெல்லிசை ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்த ஒரு பாடல்.

அந்தப் பாடல் காட்சியில் ஸ்ரீதேவி பாடலின் சந்தத்தை  சொல்ல கமல்ஹாசன் அந்த சந்தத்திற்கான வார்த்தைகளை சொல்வதாக காட்சியை அமைத்திருந்தார் பாலச்சந்தர்.

‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தின்  பாடல் கம்போசிங்கின்போது  அந்தக் காட்சியை தான் உருவாக்கியிருந்த அதே பாணியில்தான் அந்தப் பாடல் உருவாகப் போகிறது என்பதை  பாலச்சந்தர் கனவிலும் எதிர்பார்த்திருக்க  மாட்டார்.

அந்தப் பாடல் காட்சிக்கான சூழ்நிலையை  பாலச்சந்தர் விளக்கியதும் விஸ்வநாதன் சந்தத்தை சொல்ல அடுத்த கணம் கண்ணதாசனின் வாயிலிருந்து அற்புதமான வார்த்தைகள் வந்து விழுந்தன.

“இன்னும் சரியாக சொல்வதென்றால் ரசிகர்கள் படத்திலே அந்தப் பாடல் காட்சியில் அந்த பாடலை எப்படிக் கேட்டார்களோ அதைவிட வேகமாக  நான் சந்தத்தைச்  சொல்லச் சொல்ல  கண்ணதாசன் வார்த்தைகளைச்  சொன்னார். அந்த பாடல் உருவானவிதம் பற்றி  இன்று நினைத்தாலும் என் உடம்பு சிலிர்க்கிறது…” என்று ஒரு கட்டுரையிலே குறிப்பிட்டிருக்கிறார் விஸ்வநாதன்.

கவிஞர் கண்ணதாசன் எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். அதேபோல எம்.எஸ்.விஸ்வநாதனும், பல கவிஞர்களுடன் பணியாற்றி இருக்கிறார் என்ற போதிலும் கவிஞருக்கும், மெல்லிசை மன்னருக்கும் இருந்த உறவை ‘தெய்வீக உறவு’ என்றுதான் சொல்ல வேண்டும்.

விஸ்வநாதனை ஒரு நாள் சந்திக்கவில்லை என்றால்கூட பித்துப் பிடித்தவர் போல ஆகிவிடுவார் கண்ணதாசன். நாளில் ஒரு முறையாவது அவரை சந்தித்தே ஆக வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்தபட்சம் போனிலாவது அவரோடு பேசியாக வேண்டும்.

கண்ணதாசன்-விஸ்வநாதன் ஆகிய இருவருக்குமிடையே அவ்வளவு நெருக்கம் இருந்த போதிலும் கண்ணதாசனின் ஆசை ஒன்றை அவர் பல முறை கேட்டும் நிறைவேற்ற மறுத்துவிட்டார் விஸ்வநாதன்.

கண்ணதாசனுக்கு பாட வேண்டும் என்பது தீராத ஒரு ஆசையாக இருந்தது. இப்போதுள்ளது போல கதாநாயகர்களையும், நாயகிகளையும் பாட வைக்கும் இசை அமைப்பாளர்கள் இருந்திருந்தால் அவரது ஆசை எளிதில் நிறைவேறி இருந்திருக்கும்.

ஆனால், அப்போது இருந்த விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்றவர்கள் எல்லாம் தங்களது நட்பைவிட தொழிலுக்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்ததால் கவிஞரின் ஆசை கடைசிவரையிலும்  நிறைவேறவில்லை. “ஒரு படத்தில்  எனக்கு பாட சான்ஸ் கொடுக்கக் கூடாதாடா” என்று கம்போசிங்கில் விஸ்வநாதனைப் பார்க்கும் போதெல்லாம் கேட்பார் கண்ணதாசன்.

‘பாவ மன்னிப்பு’ படத்திலே இடம் பெற்ற ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை’ பாடலை எழுதி முடித்தவுடன் “இந்தப் பாட்டை நானே பாடறேனே” என்று விஸ்வநாதனிடம் முதலில் கேட்க ஆரம்பித்த கண்ணதாசன்  சிறிது நேரம் சென்றதும் “நான் பாடற மாதிரி சுலபமான ஒரு டியூனை இந்தப் பாட்டுக்கு போடு. இந்தப் பாட்டை நான்தான் பாடப் போகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

“அதெல்லாம் வேண்டாம் கவிஞரே.. இப்ப தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க  நல்ல பேரோட இருக்கீங்க. நீங்க பாடினீங்கன்னா  ஜனங்களுக்கு உங்க மேல உள்ள மரியாதை, அன்பு எல்லாம் போயிடும். அதனாலே பேசாம எழுதற வேலையை மட்டும்  பாருங்க” என்று அவரது முகத்துக்கு  நேராக சொல்லிவிட்டார் எம்.எஸ்.வி.

கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவரும் இணைந்து திரைப்பாடல்களில் மட்டுமின்றி பக்திப் பாடல்களிலும் பல சாதனைகளைப்  புரிந்துள்ளனர். 

கொலம்பியா நிறுவனத்துக்காக அவர்கள் இருவரும் இணைந்து “கிருஷ்ண கானம்” என்ற பெயரிலே பத்து  பக்திப்  பாடல்களை  உருவாக்கினார்கள். அந்த “கிருஷ்ணகானத்”தில் தன்னுடைய பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் அமைத்திருந்த மெட்டுக்களைக் கேட்ட கண்ணதாசன் அந்தப் பாடல்களில் தன் மனதைப் பறி கொடுத்தார். நாளடைவில் படுக்கைக்குப் போகும் முன்னர் அந்தப் பாடல்களை ஒரு முறையாவது கேட்பது அவரது வழக்கமாகிப் போனது.

இரவு பதினோரு மணிக்கு விஸ்வநாதன் வீட்டில் போன் மணி அடித்தால் போனை எடுத்தவுடன் மறுமுனையில் யார் என்று விஸ்வநாதன் கேட்கவே மாட்டார். அது நிச்சயமாக கவிஞர் கண்ணதாசனாகத்தான் இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

“விசு, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்பார் கவிஞர். அந்தப் பாடல் ‘கிருஷ்ண கான’த்தில் இடம் பெற்ற ஒரு பாட்டு.

“நீ எப்போது மேடையில் கச்சேரி பண்ணினாலும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாட்டை முதலில் பாடி விட்டுத்தான் கச்சேரியைத் தொடங்க வேண்டும்” என்று ஒரு முறை விஸ்வநாதனிடம் கேட்டுக் கொண்டார் கவிஞர்.

அன்றிலிருந்து அந்தப் பாட்டைப் பாடாமல் ஒரு நாளும் கச்சேரியைத் தொடங்கியதில்லை விஸ்வநாதன். கண்ணதாசன் மறைவிற்குப் பிறகு அந்தப் பாடல் வரிகளை சற்று மாற்றி “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்” என்பதற்கு பதிலாக “அந்த கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்” என்று பாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

கண்ணதாசன் இறந்த பிறகு விஸ்வநாதனின் கனவில் அவர்  வராத நாட்களே இல்லை. தினமும் கனவில் அவரோடு  பேசிக் கொண்டிருப்பாராம் விஸ்வநாதன். இந்தத் தகவலை அவரே ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்

நல்லதொரு நட்பை மரணம்கூட பிரிக்க முடியாது என்பதற்கு கவிஞரும் விஸ்வநாதனும் கொண்டிருந்த நட்புதான் சிறந்த உதாரணம்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News