Thursday, November 7, 2024

சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான  வெற்றிப் படங்களையும் தயாரித்த  பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் கே.பாலச்சந்தருக்கு அடுத்து மிகவும் முக்கியமான நபர்.

ரஜினிகாந்தை முதன்முதலாக பஞ்சு அருணாசலம் நேரில் சந்தித்தது ‘கவிக் குயில்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்மளூரில் நடைபெற்றபோது  தினமும் மாலை வேலைகளில் பஞ்சு அருணாசலத்தை சந்திப்பதை  வழக்கமாக்கிக் கொண்டார் ரஜினி. அவரோடு பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே ரஜினிகாந்த், இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய உயரத்தைத் தொடப் போகும் நடிகர் என்று பஞ்சு அருணாசலத்துக்குப் புரிந்துவிட்டது.

தொடர்ந்து தனது படங்களில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை அந்த முதல் சந்திப்பின்போதே  பஞ்சுஅருணாசலம் எடுத்துவிட்டார்.

கவிக் குயில்’ படத்தைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ பாஸ்கருடன் இணைந்து ‘விஜய மீனா’ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய பஞ்சு அருணாசலம் அந்த நிறுவனத்தின் சார்பில் காயத்ரி’ என்ற படத்தை தயாரித்தார்.

‘காயத்ரி’ சுஜாதா எழுதிய கதை. ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் வெளி வந்திருந்தது. அந்தக் கதையைப் படித்த பஞ்சு அருணாசலத்துக்கு அதைப் படமாக எடுத்தால் நிச்சயம் சினிமாவுக்கு புதிதாக இருக்கும் என்று தோன்றியதால் உடனடியாக எழுத்தாளர் சுஜாதாவுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

“சாவி சார் கேட்டார் என்பதற்காக நான் அவசரத்தில் எழுதிக் கொடுத்த கதை அது. “தினமணி கதிரில்” அந்தக் கதை வந்தபோதே ‘நீங்கள் இப்படி எழுதலாமா?’ என்று எனக்கு நிறையக் கண்டனக் கடிதங்கள் வந்தன. பத்திரிகையில் வெளியானதற்கே அவ்வளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட அந்தக் கதையை நீங்கள் எப்படிப் படமாக எடுப்பீர்கள்?’ என்று சுஜாதா கேட்டபோது, “அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கதையை மட்டும் கொடுங்கள்..” என்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தக் காலக்கட்டத்தில் பஞ்சு அருணாசலத்துடன் தொடர்ந்து பணியாற்றியது இரண்டு இயக்குநர்கள்தான். ஒருவர் எஸ்.பி.முத்துராமன், இன்னொருவர் தேவராஜ் மோகன்.

எஸ்.பி.முத்துராமன் அப்போது பஞ்சு அருணாசலம் எழுதிக் கொண்டிருந்த வேறு இரண்டு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தேவராஜ் மோகன் தனது சொந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ஆகவே இந்த ‘காயத்ரி’ படத்தை இயக்கும் வாய்ப்பினைப் பட்டு என்கிற பட்டாபிராமனுக்கு அளித்தார் பஞ்சு அருணாசலம். சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ படம்  முதல் கிருஷ்ணன் பஞ்சுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பட்டு.

ஜெய்சங்கர் கதாநாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும்  நடிக்க 1977-ம் ஆண்டு வெளிவந்த காயத்ரி’ வெற்றிப் படமாகவும் அமைந்தது.

சுஜாதா எழுதியிருந்த அந்தக் கதையில் தான் செய்திருந்த மாறுதல்களை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை சுஜாதாவிற்குக் காட்டி அவரைஅசத்துவதற்காக ‘காயத்ரி’ படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சுஜாதாவை அழைத்துச் சென்றார் பஞ்சு. ஆனால் அன்று தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து சுஜாதா அசந்ததைவிட அதிகமாக அசந்து போனவர் பஞ்சு அருணாசலம்தான்.

‘காயத்ரி’ படத்தின் வில்லனான ரஜினியை ஹீரோ ஜெய்சங்கர் அடித்தபோது ரசிகர்கள் ஆவேசமாக ஜெய்சங்கரைத் திட்டினார்கள். அதே நேரத்தில் ஹீரோ ஜெய்சங்கரை வில்லன் ரஜினி அடித்தபோது, தியேட்டரில் விசில் பறந்தது.

இனி ரஜினிகாந்த் வில்லனல்ல என்பதையும், தொடர்ந்து அவரை வில்லனாக நடிக்க வைத்துப் படம் எடுத்தால் அது மாதிரியான படங்களை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும் பஞ்சு அருணாசலத்திற்கு இந்த ‘காயத்ரி’ படம் தெளிவாக உணர்த்தியது.

‘காயத்ரி’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் பெற்ற அந்த அனுபவம்தான் ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் ஒரு முக்கியமான மாறுதலை அவர் செய்யக் காரணமாக அமைந்தது.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் தயாரிப்பாளரான  எம்.ஏ.எம்.மணியும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஏவி.எம்.ஸ்டுடியோவில் மணி புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றியபோது எஸ்.பி.முத்துராமன், அங்கே எடிட்டிங் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

தன்னுடைய நெருங்கிய நண்பரான எஸ்.பி.முத்துராமன் மிகப் பெரிய இயக்குராக உயர்ந்ததும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார் மணி.

அப்போது மகரிஷி எழுதிய ‘பத்ரகாளி’ கதை திருலோகசந்தர் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. ஆகவே அவர் எழுதி ‘குமுதம்’ இதழில் வெளியான ‘புவனா ஒரு கேள்விக் குறி’ கதையின் உரிமையை வாங்கிய மணி, அந்தக் கதையின் மூன்று முக்கியமான பாத்திரங்களுக்கு சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ரா ஆகியோரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுடன் பஞ்சு அருணாசலத்தை சந்திக்க வந்தார்.

மகரிஷி எழுதிய நாவலை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்ட பஞ்சு அருணாசலம் உடனே அதைப் படித்து முடித்தார். அந்த நாவல் அவருக்கும் பிடித்திருந்தது.

அந்தக் கதைக்கான திரைக்கதையை எழுதி முடித்தபோது வாழ்க்கையைப் பறி கொடுத்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் கதாநாயகன் பாத்திரத்தில் சிவகுமாரும், கதாநாயகியைக் கெடுத்துவிட்டு அவளைவிட்டு விலகும் பாத்திரத்தில் ரஜினியும் நடித்தால் அந்தப் படம் வழக்கமான ஒரு படமாக ஆகிவிடக் கூடிய அபாயம் இருப்பதாக பஞ்சு அருணாசலத்துக்குத் தோன்றியது.

தன்னுடைய கருத்தை தயாரிப்பாளரான மணியிடமும், இயக்குநரான எஸ்.பி.முத்துராமனிடமும் சொன்னார் அவர். அவரது அந்தப் பயம் நியாயமானது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்றாலும்  அந்த நல்லவன் வேடம்தான் சிவகுமாருக்கு என்று ஒப்பந்தம் செய்யும்போதே, சிவகுமாரிடம் சொல்லிவிட்டதால் மீண்டும் அவரிடம் போய் எப்படி மாற்றி சொல்வது என்று அவர்கள் இருவரும் சங்கடப்பட்டார்கள்.

“நெகடிவ்வான பாத்திரத்தை ஏற்று நடித்தால் அவருக்கும் அது வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில் படம் வெற்றி பெறவும் அது உதவியாக இருக்கும் என்பதை சிவகுமாருக்கு சொல்வோம். அதற்குப் பிறகும் ‘எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. நான் அந்த நல்லவன் பாத்திரத்திலேயே நடிக்கிறேன்’ என்று அவர் சொன்னால் அந்தப் பாத்திரத்திலேயே நடிக்கட்டும்” என்றார் பஞ்சு.

சிவகுமாரை சந்தித்து புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் அவருடைய பாத்திரத்தை   மாற்றியிருப்பது பற்றி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் சொன்னபோது “என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?” என்று முதலில் ஆதங்கப்பட்டாலும், பாத்திரங்களை மாற்றியதற்கான காரணங்களை பஞ்சு அருணாசலம் விளக்கிச் சொன்ன பிறகு பெருந்தன்மையோடு சிவகுமார் ஒப்புக் கொண்டார்.

அப்போது ரஜினிகாந்த் பல படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகராக இருந்த போதிலும் பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். ஆகவே இந்த ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் தான் ஏற்கவிருந்த பாத்திரம் மாற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார் அவர்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் பஞ்சு அருணாசலம் கொண்டு வந்த முதல் மாற்றம் அது. அந்த மாற்றத்தைக் கொண்டு வந்த பஞ்சு அருணாசலம்தான் ரஜினியின் முதல் ‘பஞ்ச்’ டயலாக்கையும்  எழுதியவர்.

‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தின் கதைப்படி சிவகுமார் தவறு செய்துவிட்டு வர, அதனைத் தெரிந்து கொள்ளும் ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார் “பத்தோடு பதினொண்ணு விட்றா” என்று அலட்சியமாக பதில் சொல்ல   ‘‘கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்”என்று அழுத்தம் திருத்தமாக ரஜினிகாந்த் சொல்வார். ரஜினிகாந்த் திரையில் பேசிய முதல்  ‘பஞ்ச்’ டயலாக் இதுதான்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News